பக்கம் எண் :

216கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

என்னுள் மறைந்து கிடந்த கவிதையுணர்வைத் தூண்டித் தூண்டி வளர்த்தவர் அவரே. அதனால் என் கவிதையுணர்வுக்குச் செவிலி யென்று நான் அவரைக் குறிப்பிடுவதுண்டு.

என் பாடல்களைத் தொகுத்து, நூலாக்கி முதன்முதல் அச்சு வடிவிற் கொணர்ந்தவர் அவர்தான். அதன் பின்னரே நான் கவிஞர் முடியரசன் ஆனேன்.

அவர்க்கும் எனக்கும் இடையிடையே பிணக்கு வருவதுண்டு. ஆனால் கணவன் மனைவியரிடையே ஏற்படும் 'ஊடல்' போல விரைவில் மறைந்துவிடும்.

ஒரு கால் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, என்னுடன் பிணங்கிச் சில நாள் பேசாதிருந்தார். அப்பொழுது நாங்கள் பயின்ற மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையின் பொன்விழா மலருக்கு என்னிடம் பாடல் வேண்டினர். தமிழண்ணலிடம் கட்டுரை வேண்டினர். எங்கள் பிணக்கை மனத்திற்கொண்டு 'பிரிந்த நண்பன்' என்னுந்தலைப்பில் உருக்கமாகப் பாடல்கள் எழுதித் தந்தேன்.

மலர் அச்சாகி எனக்கு வந்தது. படித்துப் பார்த்தேன். என் பாடல் தலைப்பு 'பிரியா நண்பன்' என அச்சாகியிருந்தது. இது யார் செய்த வேலை? என்று சினந்து கொண்டேன். 'தமிழண்ணல் தான் திருத்தினார்' என்று விடை வந்தது. மலரைப் புரட்டினேன். தமிழண்ணல் கட்டுரையைப் படித்தேன். என் பாடற்றிறனைப் பாராட்டிக் கட்டுரையெழுதியிருந்தார்.

நாங்கள் பிணங்கியிருந்தோம் பேசாதிருந்தோம். ஆனால் எங்கள் நட்பு, பிணங்காது பேசிக் கொண்டுதான் இருந்தது எழுத்தோவியத்தில். மீண்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இன்று வரை நீடிக்கிறது.

அண்ணன் இராம சுப்பையா

காரைக்குடி அண்ணன் இராம.சுப்பையா என்றவுடன், ஓயாது ஓடியோடி உழைத்துக் கொண்டிருக்கும் ஓர் உருவம் தான் கண்முன் தோன்றும். 'உழைப்பு ஓர் உருவம் பெற்று, அது ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் அதிசயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையானால் இராம.சுப்பை யாவைப் பாருங்கள். அந்த உழைப்புப் பெற்ற உருவந்தான் அவர்' என்று கலைஞர் கூறியது நினைவிற்கு வரும்.