பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்217

எளிமையானவர், இனிமையானவர், அன்பானவர், அவர், தமிழ்நாடு - சட்ட மன்ற மேலவை உறுப்பினராக இருந்த போதும் அந்த எளிமை, இனிமை, அன்பு அவரைவிட்டு விலகவில்லை.

1949ஆம் ஆண்டு, நான் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தது முதல் எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவரைக் கண்டதும் கட்சியின் பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்து நினைத்து உரையாடு வோம். அவ்வாறு உரையாடுவதில் அவருக்கு ஒரு தனிஇன்பம். எனக்கு ஒரு மாதத்திற்குரிய சத்து - தெம்பு ஏற்படும்.

நட்பு எங்கள் அளவில் நிற்காது. குடும்பத்தொடர்பாக மலர்ந்தது. அவர்தம் துணைவியார் விசாலாட்சி அவர்கள் என்பாற் பேரன்பு காட்டி வந்தார். மக்கள் என்பால் அன்பும் மதிப்பும் கொண்டு ஒழுகி வருகின்றனர். அவரை அண்ணனாகவே மதித்து வருகிறேன். எங்கள் நட்பைப் பற்றி அண்ணல் இராம. சுப்பையாவே கூறுவதைக் கேளுங்கள்.

"இலக்கிய விழாக்களிலேயும் வேலை செய்ய ஆரம்பிச்சதாலே நம்ப கட்சியிலே பற்றுதலுள்ள தமிழாசிரியர்கள் பலர் நண்பர்கள் ஆனாங்க. அதுவே முக்கிமா பெரியகுளத்திலேயிருந்து, எங்க ஊர்ப் பள்ளிக்குத் தமிழாசிரியரா வந்திருந்த துரைராஜைப் பத்திக் கொஞ்சம் சொல்லணும். அந்த நண்பர் துரைராஜ்தான், கவிதைத் துறையில் புகழ்பெற்ற கவியரசு முடியரசன். கவிஞர் முடியர சனுக்கும் எனக்கும் இடையில் இருந்தது வெறும் நட்பு மட்டுமில்லே. அதைச் சகோதரப் பாசம் தான் சொல்லணும். பொதுவாழ்க்கையில் மட்டுமில்லாம, தனி வாழ்க்கையிலும், ரெண்டுபேரும் ஒருத்தரோடஒருத்தர், எல்லா விஷயங்களையும் மனசு விட்டுப் பகிர்ந்துக்கிட்டிருக்கோம். நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுப்பழக ஆரம்பிச்சு, நண்பர்களாகிப் பல வருஷங்கள் ஆச்சு, இன்னிக்கும் அதே பாசத்தோடதான் ரெண்டு பேரும் வாழ்ந்துக் கிட்டிருக்கோம்". "நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்"

இராம. சுப்பையா : அண்ணன் இராம சுப்பையா அவர்கள் தம் வாழ்க்கைத் துணைவியாருடன் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்தவர்.