பக்கம் எண் :

228கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

அதன் பின்னர் எனது மாளிகையிற் சமையல் நடக்கும். இப்படி ஒரு முறையா? இரு முறையா? பல முறைகள் இந்நிலைதான். எத்தனை முறை இவ்வாறு என் வாழ்க்கையில் நிகழினும் ஒரு நாளேனும் பட்டினி கிடந்தது கிடையாது. அஃதே ஒரு பெருமையன்றோ?

பதினோராம் வகுப்பிற் பயின்று கொண்டிருந்த என் மகன் பாரி, ஒழுங்குறப் பயிலாமல் திரிந்தமையால் என் இல்லத்தி லிருந்து துரத்தி விட்டேன். அப்பொழுது அவனைச்சுப்பையா தான் அரவணைத்துக் காத்தார். அவரினும் அவர் துணைவியார் விமலா காட்டிய அன்பு பசுமையாகவே திகழ்கிறது. இருவரும் தம் மகனை வளர்ப்பது போல வளர்த்துப் பதினோராம் வகுப்புத் தேர்வு எழுத வைத்து, வெற்றி பெற்ற பின்னரே அவனை என்பாற் கொணர்ந்து விடுத்தனர். அவ்வண்ணம் என்நண்பர்கள் ஆற்றிய உதவிகள் என் உள்ளத்திற் புகுந்து உயிருடன் கலந்து, உணர்வு மயமாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

பொறியர் துரைராசன்

சீர்காழி நா.துரைராசன் என்ற நண்பர் ஒரு நல்ல நேர்மையான பொறியர். உண்மை, உழைப்பு, அன்பு, இரக்கம், இவர்தம் சொத்து. பொதுப்பணித் துறையில் துணைப் பொறியராகச் சேர்ந்த இவர், உழைப்பாலும் நேர்மையாலும் இன்று மாநில தலைமைப் பொறியராக (C.E.) உயர்வு பெற்றுள்ளார்.

இவர் குடும்பமும் என் குடும்பமும் நெருங்கிப் பழகி, உறவு முறை கொண்டுள்ளன. இவர் எனக்குத் தம்பியாக விளங்கி வருகின்றார். காரைக்குடியில் என்னுடன் எவ்வளவு எளிமையிற் பழகினாரோ அதே எளிமை இன்றும் மிளிர்கிறது. இவர் ஆற்றிய உதவிகள் பல. எனினும் ஒன்று கூறுவேன்.

பாடநூல் எழுதிய எனக்கு நான்காயிரம் உரூவா கிடைத்தது. அதைக் கொண்டு எனக்கு ஒரு வீடு வாங்க நண்பர்கள் முயன்றனர். அம்முயற்சியில் எனக்கு விருப்பம் இல்லை. அப்பொழுது நண்பர் துரைராசனார், தம் கைப்பணம் ஆயிரம் உரூவாவை முன்பண மாகக்கொடுத்து, வீடு வாங்கச் சொல்லி விட்டுப் பணி மாற்றம் பெற்று வேற்றூர் சென்றுவிட்டார். என்னைச் சிக்க வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டதால், இப்பொழுது நானிருக்கும் வீட்டை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.