244 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
‘அதெல்லாம் வாத்தியாருக்கு நினைவிருக்காது, நீ வா’ என்று அழைத்துச் சென்றார். இருவரும் புரட்சிக் கவிஞர் இல்லத்துக்குச் சென்றோம். வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு கவிஞர், ‘பென்சிலை’த் தீட்டிக் கொண்டிருந்தார். வணக்கம் - என்றோம். தீட்டிக் கொண்டே ‘ம்ம்’ என்றார். நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. சிறிது நேரம் இருபாலும் பேச்சே இல்லை. பின்னர், வாணியண்ணன் என்னைச் சுட்டிக் காட்டி, ‘இவர் கவிஞர் முடியரசன்’ என்று அறிமுகப்படுத்தினார். ‘ஓ’ தெரியுமே சென்னை முத்தியாலுப்பேட்டையில் தானே வேலை பார்க்கிறாய்? என்றார் ‘பென்சிலை’த் தீட்டிக் கொண்டே. எனக்கு வியர்த்துவிட்டது. கதையைப் பற்றித்தான் பேசப் போகிறார், என்ன நடக்குமோ? என்று நடுங்கிக் கொண்டே ஆம் என்றேன். ‘உன் கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்; நன்றாக எழுது கிறாய், நம்ம குயிலுக்குப் பாட்டெழுது, போடுவோம். இயற்கையைப் பற்றி எழுது, அழகின் சிரிப்பை அவர் கூடச் சொன்னாரா இல்லையா? யாருமே தமிழில் இப்படிப் பாடவில்லை. இயற்கையைப் பாடுவது எளிதில்லை, என்று மனந்திறந்து அவர் பேசியதுதான் தெரியுமே’ - எனத் தீட்டியவாறே பேசிக் கொண் டிருந்த கவிஞர், ‘ம்ம்ம், அதெல்லாம் தமிழ்ச் சோலைக்குள்ளே புகுந்தவனுக்குத் தானே வரும், நீ எழுது’ என்று கூறிக் கொண்டே திடீரென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார். அதன் பிறகுதான் எனக்கு நடுக்கம் நின்றது ‘அழகின் சிரிப்பு’ அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏதேதோ சொன்னாரே என்ன சொன்னார்?, என்று அண்ணனிடம் மெதுவாக வினவினேன். ‘நாவலர் சோமசுந்தர பாரதியார், அழகின் சிரிப்பு என்ற கவிஞரின் நூலைப் பற்றிப் பாராட்டிப் பேசியதைத்தான் குறிப்பிடுகிறார்’ என்று அண்ணன் சொன்ன பிறகு தான் எனக்கு விவரம் தெரிந்தது. ‘’பார்த்தியா, ‘கதையை’ வாத்தியார் மறந்திட்டார், என்று சொல்லிச் சிரித்தார் வாணி. உள்ளே சென்ற கவிஞர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அப்பொழுது கவிஞர் மகன் கோபதி (மன்னர் மன்னன்) வெளியில் வந்தார். அவரைப் பார்த்து, அப்பா என்ன செய்கிறார் என்றோம். ‘கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார்’ என்று கூறிப் போய்விட்டார். |