பக்கம் எண் :

296கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு நிறையச் செய்ய வேண்டு மென்பது என் ஆசை. என் பொருளாதாரம் இடங் கொடுக்க வில்லையே’ என்று வருந்தி யெழுதியிருந்தார்.

இத்தகு தாயுள்ளத்தை -தலையளியை என்னென்பது? வலிந்து வந்து எனக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எவ்வாறு தோன்றிற்று? என்னை ஆட்கொண்ட தமிழன்னைதான் அவர்தம் தண்ணளியைப் பெற வைத்தனள் என்று கருதுகின்றேன்.

தனித்துப் பிறந்து தவிக்கும் என்னை
இனித்த மொழியால் இனிய முகத்தால்
உள்ளுறும் அன்பால் உடன்பிறப் பாக்கி
அள்ளி யுதவி அரவணைத் தளிக்கும்
பார்வதி தேவியைப் பணியும் புகழும்
ஓர்தமிழ் உணர்ந்தஎன் உயர்சிறு நாவே

பண்டை நாளில் புலவரைப் போற்ற வள்ளல்கள் இருந்தனர் என்று படித்துளேன். இன்று புலவரைப் போற்றும் புரவலர் உளரோ இலையோ யானறியேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அண்ணலார், அடிகளார், பார்வதி நடராசன் போன்றோர் கைம்மாறு கருதாப் புரவலராக விளங்குவதைக் கண்கூடாகக் காண்கின்றேன்.

இவர்களைப் பற்றி விரிவாக எழுத எண்ணியிருந்தேன். பாழும் நோய் வந்து என்னைத் தாக்கியதால் அவ்வாறு எழுத இயலவில்லை. எனினும் சிறுசிறு குறிப்புகளாக எழுதியுள்ளேன். இப்பெருமக்களை என் வழிவழி வருவோர் நினைந்து வணங்கக் கடமைப் பட்டுளர்.

நோய் வாய்ப்பட்டு மருத்துவனையிற் சேர்க்கப்பட்ட பொழுதும் தவத்திரு அடிகளார், பார்வதி நடராசன், இன்னும் பலர் பத்தாயிரம் வரை பொருளுதவி செய்து என்னைக் காப்பாற்றினர். நான் நோய் வாய்ப்பட்ட செய்தியை யறிந்த தமிழக முதல்வர் மாண்புமிகு முதல்வர் கலைஞர். மு: கருணாநிதி யவர்கள் மாவட்டச் செயலர் த. கிருட்டினன் அவர்கள் வாயிலாகப் பத்தாயிரம் உரூவா தந்து உய்த்தனர். அப்பெருந்தகை என்பால் என்றும் பேரன்புடையவர்.

நான் பொருளற்றவனாயினும் என்னையும் பொருட் படுத்திப் பொருளுதவி செய்து காத்த இப்பேருளங்களுக்கு எவ்வாறு நன்றி