பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

தெரியாதே என்றார். எனக்கு ஆங்கிலந் தெரியாதே என்றேன். ‘கொஞ்சங் கூடத் தெரியாதா?’ என்றார். ஆம்; தெரியவே தெரியாது. இஃது என் விடை. ‘நீ என்ன ஆசிரியர்?’ - அவர் வினா. தமிழாசிரியர் - என் விடை. ‘எங்கே வேலை பார்க்கிறாய்?’ அமைச்சர் வினா. முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் - என் மறுமொழி. ‘எந்த ஊர்?’ - அமைச்சர். பெரியகுளம் - நான்.

அதற்குள் அழகு வேலன், ‘எனக்கு இந்தி தெரியும், இந்தியிற் பேசுங்கள்’ என்றார். அழகு வேலனுக்கு இந்தி தெரியாது. வேண்டு மென்று அவ்வாறு கூறினார். அமைச்சர், எனக்கு ‘இந்தி தெரியாதே’ என ஏளனமாகக் கையை விரித்துக்காட்டினார். பின்புறம் நின்றவர்கள் (ஆசிரியரல்லர்) கை கொட்டிச் சிரித்து விட்டனர். சினந்தெழுந்த அமைச்சர், ‘இது என்ன நாடகக் கொட்டகையா? கைகொட்டிச் சிரிக்க? உடனே வெளியேறுங்கள்’ என்று முழக்க மிட்டார். பின் வரிசையில் நின்றோர் வெளியேறத் தொடங்கினர். ‘போகாதீர்கள்; அங்கேயே நில்லுங்கள்’ அமைச்சரின் மறு ஆணை இது. வெளியிற் செல்லாது அங்கேயே நின்றனர்.

நான் எழுந்து, ஐயா நீங்கள் எந்த மொழியிற் பேசினாலும் நாங்கள் கேட்கக் காத்திருக்கிறோம். எந்த மொழியிற் பேச வேண்டுமென நீங்கள் வினவியதால் தான் தமிழிற் பேசுமாறு வேண்டினேன். உங்களுக்கு எது விருப்பமோ அம்மொழியிற் பேசுங்கள் - என்று கூறினேன். (அவினாசிலிங்கனார் உண்மை யான தமிழ் நெஞ்ச முடையவர். பள்ளியில் திருக்குறள் புகுந்தது அவரால் தானே! தமிழாசிரியர் நிலை உயர்ந்ததும் அவரால் தானே! தமிழிற்கலைக் களஞ்சியம் கொண்டு வந்தவர் அவரல்லவா, சுயமரியாதைக் கொள்கை அவருக்குப் பிடிக்காது அவ்வளவு தான்) தமிழிலேயே பேசத் தொடங்கினார்.

அமைச்சர் பெருந்தன்மை

பேச்சு முடிந்ததும் ‘ஐயங்களிருந்தால் கேட்கலாம்’ என்றார் அமைச்சர். நான், அழகுவேலன், திருஞான சம்பந்த முதலியார் மூவரும் எழுபத்தைந்து விழுக்காடு வினாக்கள் எழுப்பினோம். அமைச்சர் சூடாக அமைதியாக, மகிழ்ச்சியாகப் பல்வேறு வகைகளில் விடை தந்தார். திருஞான சம்பந்த முதலியார்க்கு விடை சொல்லும் போது, அவரை நீ, நீ என்று பலமுறை சொல்லி விட்டார் கல்விய மைச்சர்.