பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்75

கருத்து வேறுபாடுடைய பல கருத்துகளை எடுத்துக் கூறிய தோடு, வள்ளுவர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். அப்பொழுதே கூட்டத்திற் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. பின்னர் அரசியல் பேசத் தொடங்கி விட்டார். திராவிட நாடு பிரிவினை பற்றித் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்திற் சிறு குழப்பம் ஏற்பட்டது.

தலைவர் பாரதியார் ‘அரசியற் பேச்சை நிறுத்துங்கள், வள்ளுவரைப் பற்றிப் பேசுங்கள்’ என்று இரண்டு மூன்று முறை கூறியும் அவர் விடவில்லை. மேலும் அதையே சாடத் தொடங் கினார். கூட்டத்திற் பலர் எழுந்து நின்று ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என முழக்க மிட்டனர். அப்பொழுதும் அவர் பேச்சைநிறுத்தவில்லை. பாரதியார் சற்று வலிந்து அவர் பேச்சை நிறுத்தினார்.

பின்னர் அரைகுறையாகப் பேச்சை முடித்து விட்டு வள்ளுவர் படத்தைத் திறக்க முயன்றார். ‘படத்தைத் திறக்காதே!’ என்று கூட்டத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘இது வள்ளுவர் உருவமா? இல்லை, இல்லை, அதனால் திறக்காதே? என்று காரணத்துடன் முழங்கினர். குழப்பத்துடன் முடிந்தது அந் நிகழ்ச்சி.

அடுத்துச் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் படத்தைத் திரு.வி.க திறந்து வைத்தார். அவர் சொற்பொழிவில், ‘கல்வி யமைச்சர் அவினா சிலிங்கனார். திருக்குறளிற் காமத்துப் பால் தேவையில்லாதது என்று பேசி வருகிறார். அவர்க்கு விடை சொல்ல வேண்டுமென்று விழைந்து வந்தேன். ஆனால் அவர் பேசி விட்டு எழுந்து சென்று விட்டார். எனினும் உங்களுக்குப் புகல்கின்றேன்’- என்று கூறிக் காமத்துப் பாலின் இன்றியமையா மையை வற்புறுத்தியும் அது தமிழர் பண்பாடு என்பதை நிலை நிறுத்தியும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலான நூல்களைச்சான்று காட்டியும், தமது கருத்தை நிறுவினார்.

இறுதியில், ‘தென்னாட்டுப் பிரிவினை இயக்கத்தை எவராலும் அழித்தல் இயலாது. தமிழர், தெலுங்கர், மலையாளி என இன்று தனித்தனியே பிரிந்திருப்பினும் நாளை ஒன்று பட்டே ஆதல் வேண்டும். அதற்குரிய சூழ்நிலையும் உருவாகத் தான் செய்யும். அன்று தென்னாடு பிரிந்தே தீரும்’ - என அழுத்தமாகக் கூறினார்.