பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

போங்கோ, தயவு செய்து மன்னுச்சுக்கங்கோ; உங்க காலப்புடுச்சுக் கேக்கிறேன்’ என்று கால்களைப் பிடித்து விட்டார். அவ்வளவு பெரியவர் இப்படிச் செய்ததும் இளகிவிட்டேன். பின்வீட்டிற்குச் சென்றேன்.

என் இனிய மாணவர்கள்

மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளு வேன். கடுஞ்சொற்களால் திட்டி விடுவேன். சில வேளை அடித்தும் விடுவேன். பொறுத்துக்கொள்வர். அந்த அளவிற்கு அன்புஞ் செலுத்துவேன். பாடநூல்கள் வாங்காதிருந்தால் கடுமையாய்ப் பேசி விடுவேன். அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தால் பள்ளியில் வாங்கிக் கொடுப்பேன். (பணம் என் சம்பளத்திற் பிடித்துக் கொள்ளப்படும்)

படிப்பில் மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கண்காணிப்பேன். பொத்தான் மாட்டாமல் வகுப்பில் நுழைதல் கூடாது; தலையை ஒழுங்காக வாரி வருதல் வேண்டும். வேட்டியை மடித்துக் கட்டுதல் கூடாது. பெண் குழந்தைகள் மஞ்சள் பூசி வர வேண்டும் என்றெல் லாங்கட்டுப் படுத்துவேன். அவர்களும் அப்படியே நடந்து கொள்வர்.

ஒருநாள், ஓரம்மையார் பள்ளிக்கு வந்து, ‘என்பிள்ளையை மஞ்சள் பூசிக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிக்கிறீர் களாமே! எங்கள் பிள்ளையை மஞ்சள் பூசாமல்தான் அனுப்பு வோம்’ என்று சண்டைக்கு வந்து விட்டார். அன்று முதல், மஞ்சளை மறந்தே விட்டேன். பிள்ளைகளை, ‘ராசா’ என்றும் ‘ராசாத்தி’ என்றும் அழைப்பது என் வழக்கம். பிள்ளைகள் என் இல்லத்திற்குத் தாராளமாக வந்து செல்வர். வேண்டும் உதவிகளையும் செய்து மகிழ்வர். சிலர், தாம் எழுதிய கதை, கட்டுரை, கவிதைகள் கொணர்ந்து செப்பஞ் செய்து கொண்டும், ஐயங்களை அகற்றிக் கொண்டும் செல்வர். அவர்கள் இன்று அரசியல் துறை வல்லுநராக, தனித்தமிழ் ஆர்வலராக, பேராசிரியர்களாக, வழக்குரைஞர்களாக, திரைப்படத் துறைப் புகழராக விளங்குதல் கண்டு மகிழ்ந்து வருகிறேன். அவர்தம் பெயர்களை அவர்கள் சொல்ல வேண்டுமே தவிர, நான் கூற விரும்பவில்லை.

பார்ப்பன ஆசிரியர் சிலர், மாணவர் சாதி பார்த்து மதிப்பெண் வழங்குவதுண்டு, ஒரே விடை எழுதியிருப்பினும் தன் சாதிப்