பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

'தமிழ், இலக்கிய வளஞ்செறிந்த மொழிதான்; ஆனால், அறிவியற் கலைகளை அது பெறவில்லையே! ஆங்கிலமல்லவா அக்கலைகளனைத்தையும் பெற்றுள்ளது; அதனால் அக்கலை களைக் கற்று நாமும் முன்னேற, ஆங்கிலந்தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அப்பெருமக்கள் பேசியதாக எழுதி யிருக்கிறாய். ஆம்; உண்மைதான்; அறிவியற் கலைகளை ஆங்கிலம் பெற்றுள்ளது உண்மைதான். அதற்காக எந்தக் காலத்திலும் இரவல் பெற்றே வாழ வேண்டுமா? அவ்வாறு வாழ வேண்டுமென்று நியதியா? நம் தாய்மொழியும் அம்மொழியைப் போல் எப்பொழுது தான் அந்தக் கலைகளைப் பெற்று விளங்குவது? அதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டாவா? முயலவேண்டுமென்ற ஆர்வமாவது தோன்ற வேண்டாவா? அக்கலைகளையெல்லாந் தாய்மொழியில் ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற முயற்சியிலல்லவா நாம் இறங்கி யிருக்க வேண்டும்? அவ்வாறு செய்யக் கருதாது, ஆங்கிலத்திற்றான் கற்கவேண்டும் ஆங்கிலத்திற்றான் கற்பிக்க வேண்டுமென்று அடம்பிடித்தால் நாம் விடுதலை பெற்று விட்டதாகச் சொல்லிக் கொள்வதிற் பொருளேயில்லை.

இன்று, விண்வெளியிலே வட்டமிட்டு வருமளவிற்கு விஞ்ஞான வளம்பெற்ற நாடுகளைக் காண்கின்றோம்; திங்கள் மண்டிலத்திலே சென்று தங்கி வருமளவிற்கு விஞ்ஞான வளம் பெற்றுள்ள நாடுகளையுங் காண்கின்றோம். அந்நாடு களெல்லாம் ஆங்கில மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்டுள்ளனவா? உருசியநாடு, ஆங்கிலத்தைப் பயிற்றுமொழி யாகக் கொண்டா இந்த நிலையை யடைந்துள்ளது? கடந்த உலகப் பெரும்போரிலே அணுக்குண்டுக்கிரையாகி, மீண்டும் புத்துயிர் பெற்று, தொழில் வளஞ்சிறந்து, உலக அரங்கிலே தலைநிமிர்ந்து நடக்கிற சப்பான் நாடு, அதன் தாய்மொழியைத் தானே பயிற்று மொழியாகக் கொண்டிருக்கிறது! பிரெஞ்சு நாட்டினரும், செருமானிய நாட்டினரும் தத்தமது தாய்மொழியை உயிராகப் பேணுவதைக் காண்கின்றோம். தாய்மொழியைப் பேணும் இந்த நாடுகளெல்லாம் முன்னேறியிருக்கும் பொழுது, அவற்றைப் போல நாமும் தாய்மொழியைப் பேணி, அக்கலைகளைத் தமிழில் ஆக்கிக் கொண்டு, கற்றால் - கற்பித்தால் நாம் மட்டுந் தாழ்ந்தா விடுவோம்? தாய்மொழியைப் பேண வேண்டுமென்ற பற்றுள்ளம் வேண்டும் தம்பி. தாய்மொழியை மறந்து, அயல்மொழிக்கே அடிமையாகி,