பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்133

அது நமக்கு எந்த அளவுக்குத் தேவை? என்ற வினாக்கள் வரும் பொழுது தான் கருத்து வேறுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

நாம் இப்பொழுது அடிமை நாட்டிலே வாழவில்லை. உரிமை பெற்ற நாட்டிலே வாழ்கிறோம். அவ்வாறாயின் மொழிக்கும் விடுதலை வேண்டும். நம்மை நாமே ஆண்டு கொண்டிருக்கி றோம்; இன்னொருவர் நம்மை ஆளவில்லை. அதுபோலவே நம் மொழியையும் மற்றொரு மொழி ஆள்வது கூடாது. மொழிக்கும் உரிமை - விடுதலை கிடைத்து விட்டதென்றால் தமிழ்மொழி எங்குஞ் செல்வதற்கு உரிமை பெற்றிருக்க வேண்டும்; எந்தத் துறையிலும் ஆட்சி பெற்றிருக்க வேண்டும். இன்னுங் குறிப்பிட்ட இடத்திற்றான் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டுமென்ற நிலை யொழிந்து விடுதலை பெற்றுத் திகழ வேண்டும். இசைத் துறையிலே தமிழ் ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றது. கோவில்களுக்குள்ளே செல்ல நம் தமிழ் மொழிக்கு உரிமையில்லை. இந்நிலையில் கல்விக்கூடங் களிலும் தலைகாட்டுதல் கூடாதென்றால் அடிமைத் தளை இன்னும் அகலவில்லையென்று தானே கருத்து? அல்லது அடிமை மனம் நம்மை இன்னும் பற்றிக் கொண்டிருக்கிறது என்றுதான் கருத வேண்டும்.

தமிழ்நாட்டிலே தமிழ்மொழிக்கு உரிமையில்லை யென்றால், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் ஆணையை எவ்வாறு நிறைவேற்றுவது? தமிழை நம் நாட்டுக் கல்வியரங்கிலே கூட ஏற்றமுடியாத நாம் உலக அரங்கிலே எவ்வாறு ஏற்றப் போகிறோம்? உரிமை பெற்ற எந்த நாட்டிலேனும் அவர்தம் தாய்மொழியை விடுத்து, அயல் மொழியின் துணையாற் கல்வி பயில்வதைக் கேட்டிருக்கின் றோமா? அவ்வாறு பயிலும் நாடுதான் உரிமை பெற்ற நாடென்று சொல்லப்படுமா? இவ்விழிநிலை காணப்பெறின், உலகம் கைகொட்டியன்றோ சிரிக்கும்? அச்சிரிப்புக்கு நாம் ஆளாவதோ? நாமே நம் தாய் மொழியைத் தாழ்த்த எண்ணுவது முறையோ? அதன் தகுதியை உயர்த்த நாமல்லவோ நினைய வேண்டும், முனைய வேண்டும்? அது தமிழ்நாட்டிலே தன்னாட்சி பெற்றுத் திகழவேண்டுமென்ற ஆர்வம் நமக்கல்லவோ வேண்டும்?