பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

10
தாய்மொழி பேண்

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. அங்கு நடைபெற்ற மாநாட்டைப் பற்றி எழுதியிருந்தாய். மாநாட்டில், பேரறிஞர் பலர் பேசியதைக் கேட்டுப் பயன்பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தாய். மிக்க மகிழ்ச்சி. கேள்விச் செல்வத்தின் சிறப்புகளை உணர்ந்து நடக்கின்றாய் என்று கருதுகிறேன். பலருடைய வாய்மொழிகளையும் கேட்கும் பொழுது நாம் மனத்தில் ஒன்றை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அஃதாவது நாமும் அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பது தான். ஒருவர் கூறுவதை அப்படியே நம்பிவிடுதல் கூடாது. அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்று, சொல்லுவோரை முன் வைத்துப் பொருளின் தன்மையை முடிவுகட்டுதல் கூடாது. எப்பொரு ளாயினும், எவர் வாய்க்கேட்பினும், அப்பொருளின் மெய்ப் பொருளை ஆராய்ந்து கண்டுகொள்வதுதான் அறிவுடைமையாகும். மேலும் நமது சிந்தனை வளர்வதற்கும் அஃது ஒரு வழியாகும்.

அம்மாநாட்டில் உரையாற்றிய பெருமக்கள், ஆங்கில மொழியின் சிறப்பையும், அஃது, உலகுக்குச் செய்த நன்மை களையும், நமக்கு அதன் இன்றியமையாத் தேவையையும் கூறி, அதனால் கல்லூரி களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் எழுதியிருக் கிறாய். மேலும், அது பற்றி என் கருத்தையும் எழுதுமாறு குறிப்பிட்டிருக்கிறாய். அங்குப் பேசியவர்கள் அனைவரும் பேரறிவாளர்கள். கல்வியைப் பற்றிக் கருத்துரைக்கும் தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் கூறியவை அனைத்தும் உண்மையே. தமிழ்மக்கள் எம்மொழியையும் வெறுப்பவரல்லர்; வேண்டி விரும்பியேற்றுக் கற்றுத் தெளிந்து மகிழும் இயல்பினர் என்ற உண்மையை அவர்தம் பேச்சு உறுதிப்படுத்துகிறது. ஆயினும், ஆங்கிலம் இனியும் பயிற்றுமொழியாக இருக்கவேண்டியது தானா?