பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்131

தனி மனிதனுக்கே சோம்பல், இவ்வளவு துன்பந் தருகிற தென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டவனுக்கு, புதிய சமுதாயத்தை உருவாக்க நினைப்பவனுக்கு, சமுதாயத்தைத் தன் வழியில் இட்டுச் செல்பவனுக்கு எவ்வளவு கேடுகள் தரும் என்பதை எண்ணிப்பார். நாட்டையே பாழ்படுத்தி விடுமல்லவா? அதனால் அவனுக்குத் 'தூங்காமை' (சோம்பலின்மை) வேண்டுமென்று வள்ளுவர் கூறு கின்றார். சோம்பலுக்கு மடி என்றொரு பெயருமுண்டு. மடி, தன்னையுடையவனை மடியச் செய்துவிடும் என்பதை அறிவுறுத்து வது போல் இருக்கிறது அச்சொல். அதனால் ஒன்றைச் செய்யும் பொழுது, இது நம்மால் முடியுமா? என்று தளரக்கூடாது; தளர்ந்து சோம்புதல் கூடாது. சோம்பலின்றி முயல வேண்டும். முயன்றால் அது பெருமை தந்தே தீரும். அதனால் சோம்பலை விட்டொழி. தொடர்ந்து முயற்சி செய்.

"படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது".

இங்ஙனம்
அறிவுடை நம்பி.

