பக்கம் எண் :

130கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

தாலும், உண்பதும் உறங்குவதுமாகக் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கும் ஒருவன், மிக விரைவில் இருப்பதையிழக்க நேரிடும். 'வினையே ஆடவர்க்கு உயிர்' என்னும் கோட்பாட்டை மனத்திற் கொண்டு முயலும் ஒருவன் பெற்றுள்ள செல்வங் குறை யாது; மேலும் வளர்ந்து கொண்டே வரும். சோம்பித் திரிவதையே தொழிலாகக் கொண்டால் செல்வம் மாளும்; வறுமை சூழும்; உடலுங் கெடும். உடல் கெடுவதின்றி, உள்ளமுங் கெட்டொழியும்; கெட்டொழிந்த வுள்ளத்தில் தீக்குணங்களே உருவாகும். மீண்டும் எளிதிற் செல்வத்தைப் பெறவும் இன்பத்தை நுகரவும் கெடு வழிகளிற் செல்லவும் அம் மனம் நாடும். அவற்றைப் பெறாவழி மனங்கலங்கி மயங்கும். முயற்சியுடையவனாக இருப்பின் இழப்புக்கு மனங் கலங்கான். முயன்றால் அவற்றைப் பெற்று விடலாம் என்ற மனத்துணிவால் நிலைகலங்க மாட்டான்.

ஒரு செயலைச் செய்து வெற்றி காண விழையும் ஒருவன் இடைவிடாது முயலவேண்டும்; சிறிது சோம்பினாலும் தளர்ந் தாலும் வெற்றி காண்பதரிது. சோம்பலுடையவனை எப்பொழுதும் உறக்கம் சுற்றிக் கொண்டேயிருக்கும். உறக்கத்தை உற்ற துணையாகப் பெற்றுள்ள அவனை, மறதி மறவாது பின்தொடரும். மறதியாற் பீடிக்கப்பட்டவன் நினைத்ததைச் செய்யமாட்டாமல் காலங் கடத்திக் கொண்டே வருவான். இறுதியில் தோல்வியைச் சந்தித்தே தீருவான். ஒன்றைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்த போதிலும் அதனைச் செய்யாமலே கெட்டொழிவான். அம்மட்டில் அமையுமோ? இன்னும் பல தீமைகளுக்கும் காரண மாகும் அச்சோம்பல்.

சோம்பலுடையவன், நண்பர்களாலும் இகழ்ந்து சொல்லப் படுவான்; எள்ளி நகையாடப் படுவான். முயற்சி யெதுவுமே யின்றிச் சோம்பலையே விரும்பியலைபவனைத் திருத்த வேண்டுமென்ற ஆர்வத்தால், நண்பர் அடிக்கடி இடித்துரைப்பர். அப்பொழுதாவது அவன் முயற்சியை மேற்கொள்ளுவான், சோம்பலை விட்டொழிப் பான் என எண்ணி, அவ்வாறுரைப்பர். அவ்வாறு பலமுறையிடித் துரைத்தும் அவன் திருந்தாவிடின் இகழ்ந்துரைக்கத்தானே செய்வர்? பாவம்! நண்பர்களின் இகழ்ச்சியுரைக்கும் ஆளாகி விடுகிறான். மேலும் சோம்பலாளன் ஒன்றுஞ் செய்ய மாட்டாமையாற் பகை வர்க்குங் கூட அடிமையாகிவிடும் சூழ்நிலைக்கு இரையாகிவிடுவான்.