பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

பேதைமையாகும். காந்தியடிகள் தாய்மொழியைப் பற்றி மேலும் கூறியிருப்பதை, இங்கே உனக்கு நினைவு படுத்துகிறேன். 'தாய் மொழியை ஒருவன் மதியாமல் இகழ்வது, தன்னுடைய தாயை இகழ்வது போன்ற அவ்வளவு கண்டிக்கத் தக்க செயலாகும். தாய்மொழியை இகழ்பவன் தேசபக்தன் என அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்லன். நம்மொழிகள், ஆழ்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளியிடுவதற்குப் போதுமான அளவு வளம் பெற்றிருக்க வில்லை என்றால், அது மொழிகளின் குறையன்று; வளம் பெறச் செய்வது, அம்மொழி களைப் பேசுகின்றவர்களுடைய பொறுப்பாகும். ஆங்கிலத்தின் வாயிலாகத்தான் உயர்ந்த சிந்தனை களை வெளியிட முடியும் என்று கருதிக் கொண்டு நம்முடைய மொழியை வளப்படுத்தத் தவறிவிட்டால், நாம் என்றென்றும் அடிமைகளாகவே இருப்போம்' எனக் காந்தியடிகள் கூறிய பொன்மொழிகளைப் புறக்கணித்து விட்டுப் புலம்புவது நமக்கு முறையன்று.

டாக்டர் வின்சுலோ என்ற அறிஞர், 'தமிழ், கிரேக்க மொழியை விட மென்மையும் திட்பமும் வாய்ந்தது; இலத்தீன் மொழியை விட வன்மைபெற்றது; ஆற்றலாலும் வளத்தாலும் ஆங்கிலத்தையும் செர்மன் மொழியையும் ஒத்திருக்கின்றது' என்று கூறியுள்ளார். அயலவராலுஞ் சிறந்ததெனப் போற்றப்படும் தமிழ் மொழியின் தகுதியை நாமே குறைக்க முயல்வது வெறுக்கத் தக்கது. ஆதலின் தாய் மொழியைப் பேணி, அயல்மொழிகளை அளவறிந்து பயன்படுத்தி வாழ்வதுதான் ஒவ்வொருவருடைய கடமையாகும். முன்னேறக் கருதும் நாட்டின் பொறுப்பும் ஆகும்.

"தாய்மொழியைப் பேணித் தாழ்ந்த நாடும் இல்லை
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை"

இங்ஙனம்
அறிவுடை நம்பி.

