பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்137

11
தாயகம் காத்துநில்

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. தாய்மொழியை எவ்வாறு பேணி வளர்க்க வேண்டும். ஏன் பேணி வளர்க்க வேண்டும் என்பனவற்றை நன்கு புரிந்து கொண்டதாக எழுதியிருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. மொழிப் பற்றில்லாத மனிதன் முழு மனிதன் எனக் கருதப்படமாட்டான். எல்லா வகையாலும் மொழிக்கு உரிமை பெற நினைப்பதும், அதற்காவன செய்வதுமே மொழிப்பற்றாகும். செயல்முறைகளை விடுத்து, வறிதே ஆரவார ஒலிகளை எழுப்புவது மட்டும் மொழிப்பற்றென்று சொல்லிவிடமுடியாது. முதலில் அடிமைப் புத்தியை விட்டொழிக்க வேண்டும். உரிமையுணர்வு மேலோங்க வேண்டும். ஈடும் எடுப்பு மிக்க இலக்கிய வளமிக்க நம் மொழி, அறிவியற் கலைவளமும் பெற்றுச் சிறப்புற முயலவேண்டும். மொழிப்பற்றைப் பற்றி முதற் கடிதத்தில் எழுத நேர்ந்தது. அதைத் தொடர்ந்து நாட்டுப் பற்றையும் விளக்கி இக்கடிதத்தில் எழுத எண்ணுகிறேன்.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே'

என்று பாரதியார் பாடியிருக்கிறார். வானுலக இன்பஞ் சிறந்தது. அவ்வின்பத்தைத் தவஞ் செய்து பெற வேண்டும். அத்தவத்தாற் பெற்ற வானுலக இன்பத்தை விடச் சிறந்தவள் தன்னை யீன்றெடுத்த தாய். அத்தாய்க்கு நிகராக மற்றொன்றுண்டா? உண்டு; அதுதான், தான் பிறந்த நாடு. அதனாற்றான் தான் பிறந்த நாடு, தாய் நாடு எனவும் தாயகம் எனவும் மொழியப்படுகிறது. அதனால் ஒருவன், தன் தாயை எவ்வாறு மதித்துப் போற்றி வணங்கிக் காக்கின்றானோ அதைப் போலவே, தன் தாயகத்தை யும் மதிக்க வேண்டும்; போற்ற வேண்டும்; வணங்க வேண்டும்; தாயகத்தை வணங்குவதற்கும்,