பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

மதித்துப் போற்றுவதற்கும் காரணமென்ன? என்ற வினாவிற்குக் கவியரசர் பாரதியார் தரும் விடையை உனக்குத் தருகிறேன். அப்பாடலை நன்கு நெஞ்சில் நிறுத்திப் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் தருகிறேன்.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனைகூறி மனத்தில் இருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ?"

இப்பாடலில் இறுதியடியை நன்கு நோக்குதல் வேண்டும். செயல், நினைவு , சொல் இம்மூன்றாலும் வாழ்த்து வதாகக் கூறுகிறார். வெறும் வாயளவில் நாட்டை வாழ்த்துவதிற் பயனில்லை. மனத்தால், செயலால் வாழ்த்த வேண்டும் என்னுங் கருத்தை நமக்குக் குறிப்பால் உணர்த்துகிறார்.

அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் நாட்டுப் பற்றை யூட்டும் முறை வேறு; உரிமை பெற்ற பின்னர் உண்டாக்க வேண்டிய நாட்டுப் பற்று வேறு. அடிமைக் காலத்தே, மக்கள் நெஞ்சங்களில் இந்த நாடு நமக்குச் சொந்தமானது என்ற உணர்ச்சியை ஊட்ட வேண்டும். அவ்வுணர்ச்சியை ஒன்று திரட்ட வேண்டும்; விடுதலை யுணர்வை, போராட்ட எழுச்சியை உண்டாக்க வேண்டும். இதற்கு வெறும் முழக்கங்கள் மட்டுமே போதும். அந்த அளவில் நாட்டுப் பற்று அமையும். ஆனால், உரிமை பெற்ற பிறகு முழக்கங்கள் மட்டும் நாட்டுப் பற்றாகிவிடா. அமைதியாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதுதான் நாட்டுப் பற்றாகக் கருதப்படும். உரிமை பெற்ற பின்னரும் செயலாற்ற முற்படாது, முழக்கங்களையே நம்பிக் கொண்டிருந்தால் நாட்டுக்கு நன்மை காண முடியாது.

தாய்மொழிக்கு ஆக்கந்தேட வேண்டும்; சமுதாயத்தைப் பாழ்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வழிகளைக் காண வேண்டும்; பொருளாதாரத் துறையில் சுரண்டலற்ற சமதர்ம நெறியைப் புகுத்த வேண்டும். சிறுதொழில்கள், பெருந்தொழில்கள்