பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்139

வளர்ச்சி பெறத் திட்டங்கள் தீட்டிச் செயற்பட வேண்டும்; இல்லாமையுங் கல்லாமையும் ஒழிந்து, பசிப்பிணி தொலைந்து, தன்னிறைவு பெற்றுச் செழிப்பும் களிப்பும் நிறைந்த புதியதோர் உலகைப் படைக்க முனைதல் வேண்டும். இம்முயற்சிகளில் ஈடுபடுவதும், ஈடுபடுவோர்க்கு ஒத்துழைப்பு நல்குவதும் நாட்டுப் பற்றாகும். இவற்றிற்குக் குந்தகம் ஏற்படுத்தினால் அது 'தேசத் துரோகம்' ஆகும். அண்டை நாடுகளின் தாக்குதல்கள் ஏற்படுங் காலத்து மக்கள் பிளவுபட்டு நிற்றல் கூடாது; ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தங்களுக்குள் பகையுணர்ச்சி, கட்சிப் பூசல் தலைகாட்ட விடுதல் தகாது. ஒற்றுமையுணர்ச்சியும், பொது எதிரியை ஒழிக்க வேண்டு மென்ற ஒரே கொள்கையும் மேலோங்கி நிற்க வேண்டும். இவ்வாறு நிற்பவர்தாம் தாயகத்தைக் காப்பவராக, நாட்டுப் பற்றுடையவராக விளங்க முடியும்.

நாடுபிடிக்கும் ஆசையால் சூழ்ந்து வரும் பகை முடித்தல் ஒன்றுதான், தாயகத்தைக் காக்கும் தொழிலாகக் கருதப்படும் என எண்ணி விடாதே. நாடு கெடுக்கும் நயவஞ்சகப் போக்கினையும் தன்னலமொன்றே கருதும் சுயநலப் பாங்கினை யும், காட்டிக் கொடுக்கும் கேட்டுக் குணத்தையும் அறவே ஒழித்துக் கட்டுவதும் தாயகம் காக்குந் தொழில்தான். இதுவே சிறந்த காப்பும் ஆகும்.

இது மக்களாட்சிக் காலம்; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்னுங் கோட்பாடு மலர்ந்துள்ள காலம்.அவ்வாறாயின் நாட்டைக் காக்கும் பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதாகிறது. அப்பொறுப்புணர்ச்சி வாய்க்கப் பெறுவதெவ்வாறு? அவனவன் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும். அரசுக்கோ, அரசின் ஆணைக்கோ அஞ்சித் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்பவன், குடியரசு நாட்டில் வாழத் தகுதியற்ற வனாவான். அஞ்சும் வகை யாலும் திருந்த முனையாமல், அரசை ஏமாற்றி வாழ்பவர்களும் உண்டு; சட்டத்தின் துணையால் நீதிமன்றங்களில் வழக்காடித் தப்பித்துக் கொள்பவர்களும் உண்டு. இவர்களால் தாயகம் கெடுமே தவிர, உயர்வு பெறவே முடியாது. தம்மைத் தாமே திருத்திக் கொண்டு வாழ்வோ ராலேதான் குடியரசு மேன்மையுறும்.

இவ்வாறு திருந்தி வாழும் மக்களைக் கொண்ட நாடுதான் நல்ல நாடென்று போற்றப்படும். நிலவளம், நீர்வளம் முதலிய