பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்145

மறக்கமுடியும் என நீ கருதுவாய். அதற்கும் வழியுண்டு. ஒருவன் எத்தகைய கொடுமையைச் செய் திருப்பினும் கொலையையொத்த கொடுமையைச் செய்திருப் பினும், அதனையும் எளிதில் மறந்துவிட வழியுண்டு. ஒருவன் செய்த கொடுமைகள் மனக்கண் முன் தோன்றும் பொழுது, அவன் நமக்கு முன்பு செய்த ஒரு நன்மையை நினைந்தாற் போதும்; அக்கொடுமைகளெல்லாம் மறைந்து விடும். தினைத் துணை நன்றியும் பனைத்துணையாகக் கருதப்படும் பொழுது, அக்கொடுமைகள் சிறியனவாகித் தாமே யழிந்துவிடு மல்லவா? இதனாற்றான் ஒருவர் செய்த நன்றியை நினைந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஒருவன் எத்தகைய குற்றங்களைச் செய்யினும், அக்குற்றங் களிலிருந்து நீங்கிக் கொள்ளும் கழுவாய்களுண்டு; ஆனால், செய்ந்நன்றியை மறந்த ஒருவன், அக்குற்றத்திலிருந்து தப்புவதற்குக் கழுவாயே யில்லை. நன்றி மறந்த குற்றம், கொலைக் குற்றத்திற்குச் சமமானது. ஆதலின் அதற்கு உய்வேயில்லை.

எத்தகைய சூழ்நிலையிலும் செய்ந்நன்றி மறந்துவிடுதல் தகாத செயலாகும். சூழ்நிலைகளுக்கும் தன்னலத்திற்கும் இடங்கொடாது, செய்ந்நன்றியறியும் வல்லானை இவ்வுலகம் என்றும் ஏத்திப் புகழும். இதற்குக் கன்னன் ஒருவனே சிறந்த சான்றாக அமைவான். குந்தி தன்னைப் பெற்றெடுத்த அன்னையென்பதையும், பாண்டவர் தன் உடன்பிறந்தோர் என்பதையும் அவள் வாயிலாகக் கன்னன் அறி கிறான்; பாண்டவருடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு கன்னனிடம் குந்தி மன்றாடுகிறாள்; வந்தால் ஆட்சிப்பொறுப்பு அவனிடம் ஒப்புவிக்கப்படும் என்றுங் கூறுகிறாள். ஆனால், கன்னன் அதற்கு ஆசைப்படவில்லை; உடன் பிறந்தவரையும் எண்ணிப் பார்க்க வில்லை. ஆற்றில் மிதந்து வந்த தன்னை - தேர்ப் பாகனால் வளர்க்கப்பட்ட தன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டு, ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பையுங் கொடுத்துள்ள துரியோதனனை, விட்டுப் பிரிய உடன்படவில்லை; இவ்வளவு காலம் தனக்குச் சோறிட்டு, உயரிய நிலைக்கு ஆளாக்கிய துரியோதனனை போர் தொடங்கி விட்ட இவ்வேளையில் தனியே விட்டுவிட்டுப் பாண்டவருடன் சேர்ந்து கொள்ள ஒப்பவில்லை. 'செஞ்சோற்றுக் கடன் கழிப்பது தான் எனக்குத் தருமமுங் கருமமும் ஆகும்' என விடையிறுத்தான்.