144 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
திருப்பின் நீ எவ்வளவு துன்புற்றிருப்பாய்! துணையின்றித் தன்னந் தனியாய் நோய்வாய்ப்பட்டுத் துன்புற்ற அச் சூழ்நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அவ்வுதவியின் பெருமை நன்கு புலனாகும். அவர், உன்னிடம் எதையாவது எதிர்பார்த்தா அவ்வுதவியைச் செய்தார்? இது செய்தால் இன்னது கிடைக்கும் என்று பயன் கருதியா செய்தார்? அன்று. அன்புள்ளம் கொண்ட ஒரே காரணத் தால், தன்னுயிர்போல் மன்னுயிரை மதிக்கும் நல்லுணர்வு பெற்றிருக்குங் காரணத்தால், பிறர் துன்புறுவதைக் காணப் பொறுக்காத இளகிய நெஞ்சம் வாய்த்திருக்குங் காரணத்தால் உனக்குத் துணையாக நின்றுதவியுள்ளார். இவ்வாறு பயன் கருதாது செய்யப்படும் உதவியின் நன்மை கடலினும் பெரிது தம்பி. பயன் கருதி அவர் உதவி செய்யவில்லை. சரி; இதற்கு முன்பாவது நீ அவருக்கு ஏதேனும் உதவி செய்ததுண்டா? அதுவும் இல்லை. இனிமேலும் செய்யத்தான் முடியுமா? கைம்மாறாகக் கொடுக்க நினைத்தால் விண்ணுலகையும் மண்ணுலகையுங் கொடுத் தாலும் அவை அவ்வுதவிக்குச் சமமாகுமா? அவ்வுதவிக்குக் கைம்மாறே இல்லை. எவ்வகைக் காரணமுமின்றிச் செய்த வுதவிக்கு என்னதான் கைம்மாறு செய்யவியலும்? காலத்திற் செய்தவுதவி, கைம்மாறு கருதாது செய்த உதவி, காரணமின்றிச் செய்தவுதவி ஆகிய இவற்றின் நன்மை அளவிட முடியுமா? இவை உலகைவிட, கடலை விட, வானை விடப் பெரியனவாம். ஒருவர் செய்தவுதவி தினையளவைப் போலச் சிறிதாக இருக்கலாம். ஆயினும் அவ்வுதவியின் அளவை வைத்து மதிப்பிடுதல் கூடாது. அதன் பயன் அளவைக் கொண்டே மதிப்பிடுதல் வேண்டும். அவ்வாறு மதிப்பிடும் பொழுது அச்சிறியவுதவி பனையளவின தாகத் தோன்றும். அவ்வுதவியின் பயனை அறிந்தவர் இவ்வாறு தான் கருதுவர். இவ்வாறு கருதும் சான்றோர், தமது துன்பக் காலத்துத் துணையாக நின்ற வருடைய நட்பை விட்டு விட மாட்டார்; தம் துன்பத்தை நீக்கி யுதவி செய்தவர்களுடைய நட்பை ஏழு பிறப்பினும் நினைந்து கொண்டிருப்பர். ஒருவன் செய்த தீமையை மறந்துவிடுவதுதான் நல்லது; நன்மையை மறப்பது அறமன்று. ஒருவன் செய்த தீமையை எவ்வாறு |