பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்147

13
நா நலம் நாடு

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. மாணவர் மன்றத்தாரால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதற்பரிசில் பெற்றதாக எழுதியிருந்தாய். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். என் மகிழ்ச்சியை விட, உன் தாயின் மகிழ்ச்சிதான் பெரிதாக இருந்தது. பிறர் தன் மகனைச் சான்றோன் என்று புகழ்ந்து சொல்லுதலைக் கேட்ட தாய், அவனைப் பெற்றெடுத்த பொழுது மகிழ்வதை விடப் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுவாள் என்பது பொய்யாகுமா? உன் தாய் மட்டும் அப்பொதுவிதிக்கு விலக்காகி நிற்க முடியுமா? நீ பெற்ற பரிசிலுக் காக அவள் மகிழ்ந்து விடவில்லை. பலருங் கலந்து கொண்ட போட்டியில் நீ முதல்வனாக வந்ததையும், பரிசில் கொடுக்கும் பொழுது தலைவர் உன்னைப் பாராட்டிப் பேசியதையும் உன் தாய், கற்பனை செய்து பார்த்து, நினைந்து நினைந்து மகிழ்கின்றார். அக்காட்சியைக் கண்டு, நான் மனத்துக்குள்ளேயே மகிழ்ந்து கொள்ளுகிறேன்.

இவ்வாறு மகிழ்வதுடன் வேறு வகையாலும் நான் களிப்படை கிறேன். உலகில் பெற்றோர்க்குச் சில கடமைகளுண்டு; பிள்ளை கட்கும் சில கடமைகளுண்டு. தம் மகனைச் சான்றோனாக்குதலும், அவனை அவையத்து முந்தியிருக்கச் செய்தலும் பெற்றோர்க்குரிய கடமையாகும். அவ்வாறு சான்றோனாக்கிய பெற்றோர்க்கு, மகன் ஆற்றவேண்டிய நன்றிக் கடனும் உண்டு. 'இவனை மகனாகப் பெற இவன் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ'! என உலகோர் வியந்துரைக்கும் வண்ணம் அவன் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் பெற்றோர்க்கு அவன் செய்ய வேண்டிய கடமை யாகும்; உதவியும் ஆகும். அந்த வகையில் நீ நடந்துகொண்டு வருகிறாய்; கல்வியிலும் சொல்வன்மையிலும் சிறந்து விளங்கி, ஊர் மெச்சுமாறு