பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

நடந்து, மகன் பெற்றோர்க்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்து வருகிறாய் என்பதையறிந்து களிப்படைகிறேன்.

இவ்வாறு, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்த உனக்குச் சொல்வன்மையைப் பற்றிச் சில கருத்துகளை எழுதலா மென்று கருதுகின்றேன். அக்கருத்துகள் உன் பேச்சுக்கலை வளர்வ தற்குத் துணை செய்யும் என்ற ஆர்வத்தால் எழுதுகின்றேன். சொல் வன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, நாவலர் பெரு மானாகிய திருவள்ளுவர், 'நா நலம்' என்று சுட்டுகின்றார். உலகிலுள்ள பிற நலம் எல்லாவற்றையும் விட இந் நாநலம் மிக்க சிறப்புடைய தென்றுங் கூறுகின்றார். இஃது உலகத்தையே தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராற்றல் வாய்ந்தது. அதனால் பிற நலங்களை விடச் சிறந்ததென்று இதனைக் கூறுவது பொருத்தமேயாகும்.

சிலர், நிறைந்த நூல்களைக் கற்கின்றனர்; பட்டங்கள் பலவும் பெறுகின்றனர்; கல்விச் சிறப்புடையராக விளங்கு கின்றனர். ஆயினும் அவர், தாம் கற்றறிந்த நூல்களையோ, தம் கருத்து களையோ விரித்துரைக்க இயலாதவராகித் தடுமாறு வதைக் காண்கிறோம். சில செடிகளும் கொடிகளும் கொத்துக் கொத்தாகப் பூத்து மலர்ந்து காட்சியளிக்கும்; கண்ணுக்கு விருந்து நல்குமாறு வண்ணங்கள் மிகுந்திருக்கும். ஆயினும் அம்மலர்களில் சிறிதேனும் மணத்தைக் காண்டல் அரிதாக இருக்கும். மணம் வீசாத இம்மலர் களுக்கும், கற்றதை விரித் துரைக்க மாட்டாத கல்வியாளர்க்கும் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. வண்ணங்களுடன் அழகுற மலர்ந்திருப் பினும் மணமில்லாக் காரணத்தால் அவற்றை மக்கள் விரும்பார்; விரும்பிச் சூடார். அதைப் போலவே பட்டங்களும் கல்வியும் எவ்வளவு பெற்றிருப்பினும் சொல்வன்மையில்லாரை உலகம் நன்கு மதிக்காது; மதித்துப் போற்றவுஞ் செய்யாது. கல்வியுடன் சொல்வன்மையும் வாய்க்கப் பெறின், அது பொன்மலர் மணம் வீசுவது போன்றதாகும்; பொதுவாகவே மணம் வீசும் மலரை மக்கள் விரும்புவர்; அம்மலரும் பொன் மலராக இருந்துவிடின் கேட்கவும் வேண்டுமோ? அதுபோல நன்கு கற்று, நாவன்மையும் பெற்று விளங்கும் ஒருவரை உலகம் உச்சிமேல் வைத்துப் போற்றும்.

இத்தகு சிறப்பு வாய்ந்த சொல்வன்மைக்கு ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேராற்றல் உண்டு. அதனால் பேசும் பொழுது சொல்லின்கட்