பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்149

சோர்வு நேராவண்ணம் காத்துக்கொள்ள வேண்டும். சோர்வு என்றால், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாது மறந்து விடுதலாம். அம்மறதியால் பேரழிவு நேர்ந்து விடுதலுங் கூடும். அரசியல் நடத்துவோர்க்கென இவ்வாறு கூறப்பட்டிருப்பினும், தனி மனிதனுக்கும் இது பொருந்தி வருவதேயாகும். சொல்ல வேண்டிய ஒன்றை மறதியாற் சொல்லாது விடும் ஒருவன் சிற்சில வேளைகளிற் பெருங் கேட்டுக்கு ஆளாகி விடுவதும் உண்டு. அதனால் அச்சோர்வு வாராது தடுத்துக் காத்துக் கொள்ள வேண்டும்.

பேச்சு, எவ்வாறிருக்க வேண்டும்? எத்தகையதாய் இருக்க வேண்டும்? என நமக்கு நாமே வினவிக்கொண்டு, ஆராய்ந்து பேச வேண்டும். அவ்வாறு பேசும் பேச்சு, நட்பாயுள்ளவர்களை அவர் வேறுபட்டுச் செல்லா வண்ணம் மீண்டும் பிணிக்கத் தக்கதாய் விளங்கவேண்டும்; பகையாயுள்ளவர்கள் பகை யொழிந்து நட்புக் கொள்ளத் தக்கதாய் இருக்க வேண்டும்; பல நூல்களைக் கேட்டறிந்த வர்களையும் ஈர்க்கத் தக்கதாய் அமைய வேண்டும்; நூல் கேளா தாரும் விழையத் தக்கதாய் அமைய வேண்டும்; தன் பேச்சை முன்பு கேட்டவர்களையும் இதற்கு முன் கேளாதவரையும் தன் வயப் படுத்தத்தக்கதாய் இருக்க வேண்டும்.

பேசும்பொழுது, அவையத்திலே உள்ளவருடைய குடிப் பிறப்பு, கல்வி, ஒழுக்கம், பருவம் முதலிய தகுதிகளையும் பேசுபவர் தம் தகுதிகளையும் இணைத்துப் பார்த்து, அவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை யறிந்து, அவற்றிற்கேற்பப் பேசுதல் வேண்டும். அஃதாவது அவையறிந்து பேச வேண்டும்; அவைக்கேற்பப் பேச வேண்டும்; அவையிலுள்ளவர்கட்கு ஏற்ற வகையில் பேச வேண்டும். இக்கோட்பாட்டைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு அவை யோர் கொண்டுள்ள கருத்திற்கேற்பத் தங்கருத்தை விட்டொழித்து, உண்மைக்கு மாறாகப் பேசி விடுகின்றனர். அது தவறு. எங்கும், எப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் தம் கருத்தைக் கைவிடுத்துப் பிறர் கருத்தின் பின்னே செல்லுதலைச் சான்றோர் விரும்பார். அவையறிந்து பேசுதலாவது, அவையோர் இளைஞரா முதியரா என்றும், கற்றோரா மற்றோரா என்றும் ஆய்ந்து குறிப்பறிந்து அவரவர் நெஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துகளை அவரவர் புரிந்து கொள்ளத்தக்க நடையில் பேசவேண்டும் என்பதேயாகும். கற்றுத் தேர்ந்த அறிவு முதிர்ச்சி பெற்ற பேரவையில் எளிய