பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்159

விலங்கினுக் கமைந்த மானவுணர்ச்சியேனும் மனிதனுக்கு இருக்க வேண்டாவோ? ஆறறிவு படைத்தவன், பகுத்தறிவு மிகுந்தவன் என்றெல்லாம் தன்னைக் கூறிக் கொள்ளும் அவன், தன்னிற் குறைந்த அறிவுடைய விலங்கினைக் கண்டும் அதனைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது விந்தையினும் விந்தையல்லவா? கவரிமா என்ற விலங்கு, தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழமாட்டா தென்று கூறுவர். அத்தகைய தன்மான வுணர்ச்சி பெற்றிருக்கிறது அது. அதுபோலவே மானத்தை மதிக்கும் மாண்புடைய சான்றோர், மானங் கெடத்தக்க சூழ்நிலை வருமானால் உயிரை விட்டொழிப் பரேயன்றி, மானத்தை விட்டுவிடச் சம்மதியார். உயிர் என்றேனும் ஒருநாள் நீங்குந் தன்மை வாய்ந்தது. மானம் எக்காலத்தும் நிலைத்து நிற்க வல்லது. அதனால் நிலையில்லாத உயிரை விட்டு, நிலையான மானத்தைக் காப்பர். அவர்களுக்கு மானம் அவ்வளவு பெரியது; உயிர் அவ்வளவு சிறியது. தமக்கோர் இழிவு வந்தவிடத்து, அதனைப் பொறுத்துக் கொண்டுயிர் வாழ மாட்டாது, அவ்வுயிரை விட்டு, மானத்தைக் காத்து நிற்கும் மாந்தருடைய புகழ் வடிவை, இவ்வுலக மானது எக்காலத்துந் தொழுது போற்றும்.

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"

இங்ஙனம்
அறிவுடைநம்பி.

