பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

"வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மான மழுங்க வரின்"

என்பது நாலடியார் நவிலும் நல்லுரையாகும்.

தம் உயர்ந்த நிலையை விட்டு, அதனின்றுந் தாழ்ந்த மக்களைச் சமுதாயம் அறவே வெறுத்தொதுக்கிவிடும். தலையினின்றும் வீழ்ந்த முடியை எவ்வாறு வெறுத்துத் தள்ளுவோமோ அவ்வாறே அம் மக்களையும் புறக்கணித்து விடுவோம். தலையில் இருக்கும்வரை அம் முடியை எவ்வெவ்வாறு பேணிக் காத்து வருகிறோம். அதைப் போலவே தந்நிலையில் நிற்பாரைப் பேணிக் காக்கின்றோம். நிலையினின்றும் இழிந்துவிடின், அவரைத் தலையின் இழிந்த முடியாகவே கருதி விடுகின்றோம். ஆதலின், தந் நிலையிற் றாழாமலும், தங்குடிக்குத் தாழ்வு வாராமலும் எவரொருவர் விளங்குகின் றாரோ அவரே நன்கு மதிக்கப்பெறும் தன்மையைப் பெறுவார் என்பதை நீ நன்கு புரிந்து கொண்டிருப்பாய் என்று கருது கின்றேன். ஒருவர் கல்வி, செல்வம், குடிப்பிறப்பு முதலிய வற்றால் மலையைப் போன்ற உயர்ச்சி பெற்றிருப்பினும் அவர் குன்றி மணியளவு இழிசெயலைச் செய்தாராயினும் மிகத் தாழ்ந்த நிலை யினையே அடைவார்.

தன்னையிகழ்ந்து பேசும் பகைவருக்குப் பின்னே சென்று, மானத்தை விட்டுக் கைகட்டிக் கெஞ்சி நின்று பிழைப் பவனையுங் காண்கின்றோம். இவனை ஒருபோதும் மக்கள் புகழ்ந்துரைக்க மாட்டார்; மாறாக இகழ்ந்தே பேசுவர். அப்பகைவன் பின்னே சென்று நின்று, அவன் வீசும் பொருளைப் பெற்று, அதனால் ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதலே அவனுக்கு நல்லது. பீடு, பெருமை, மானம் இவற்றையழித்துத் தன்னுடம் பினைக் காத்து வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?

"இழித்தக்க செய்தொருவன் ஆர வுணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?"

என்று நாலடியார் நம்மை நோக்கி வினவுகிறது. நம்மில் விடை சொல்லத் தக்கவர் யாவர்? மானத்தை மதித்து நடக்கும் பெற்றியரே விடை பகரும் தகுதி வாய்ந்தவர்; மற்றையோர்க்கு விடை சொல்ல வாயேது?