உயிருஞ் சிறந்தது; மானமுஞ் சிறந்தது. இரண்டுமே ஒவ்வொரு வராலும் ஓம்பப்பட வேண்டியவையாகும். ஆயினும் இரண்டுக்கும் ஒரு குறை ஏற்படுகிற சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அவ்விரண்டுக்கும் மோதல் உண்டாகும் ஒரு நிலை தோன்றி விடுகிறது. அஃதாவது இரண்டிலொன்றை விட்டுவிட வேண்டிய நிலை. ஒன்றை விட்டால் மற்றொன்று நிலைக்கும் நிலை வந்துவிடுகிறது. அப்பொழுது எதை விடுவது? எதை வைத்துக் கொள்வது? உயிரை விடுத்து மானத்தைப் போற்றுவதா? மானத்தை விடுத்து உயிரைக் காத்து வாழ்வதா? இஃது இக்கட்டான சமயம் மட்டுமன்று; இக்கட்டான வினாவும் ஆகும். இரண்டுமே சிறந்தவைதாம். எப்படி இவ்வினாவிற்கு விடைபகர்வது? தடுமாற்றத்தை உண்டாக்கும் இவ் வினாவிற்கு விடையும் உண்டு. விடை இரண்டு வகைப்படும். உயிரை விடுத்து மானத்தைக் காப்பது ஒன்று; மானத்தை விட்டு உயிரைக் காப்பது மற்றொன்று. தமிழ் நூல்கள் கூறும் விடை ஒன்று. வடமொழிநூல்கள் கூறும் விடை மற்றொன்று. உயிரை விட்டு மானத்தைக் காக்க வேண்டு மென்பது தமிழ் நூல் தரும் விடை. "இறப்ப வருவழி, இளிவந்தன செய்தாயினும் உய்க" என்பது வடநூல் தரும் மறுமொழி எனப் பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். ஆதலின் மானம் ஒன்றே மேம் பட்டதெனக் கொண்டொழுகுவதுதான் தமிழ்மாந்தரின் தலையாய கொள்கையாகும். மானம் என்றால் என்ன என்பதை இங்கே விளக்குவது நல்லதென்று கருதுகிறேன். எக்காலத்தும் எத்தகைய சூழ்நிலை யிலும் தந்நிலையினின்று தாழாமையும், தாழ்வு வரின் உயிர் வாழாமையும், தங்குடிப் பிறப்புக்குத் தாழ்வுவருஞ் செயல்களைச் செய்யாமையும் மானம் என்று மறைமொழி பறை சாற்றுகிறது. புகழையும் மானத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய சான்றோர், தாம் பிறந்த குடிக்குத் தாழ்வுதரும் இழிவான செயல்களைச் செய்யவேமாட்டார்; அச்செயல்கள், இன்றியமையாத சிறப்பினையுடையனவாக இருப்பினும் அவற்றைச் செய்ய ஒருப்படார். "பழியெனின், உலகுடன் பெறினுங் கொள்ளலர்" என்பது புறநானூறு புகட்டும் அறிவுரையாகும். |