பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

15
மானம் போற்று

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. சில ஐயப்பாடுகளை எழுதி யிருந்தாய். அவற்றிற்கு விளக்கந் தரும் வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். பணிவுடைமை என்பதைத்தான் அடக்கமுடைமை என்று எழுதினேன். பணிவுடைமை என்று பணிவாகப் பேசு வதையும், பணிந்து நடப்பதையுந்தான் பொதுவாகச் சொல்லு வார்கள். அவற்றைக் குறித்தெழுதும் போது, புலனடக்கத்தையும் மனவடக்கத்தையுஞ் சேர்த்தே எழுதினேன். இவ்வடக்கங்கள் பணிவுடைமையை மிகுதிப் படுத்தவும், வருங்கால வாழ்க்கை முறைகளைச் செம்மைப் படுத்தவும் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையால் எழுதினேன்.

முன்னர் எழுதிய கடிதத்தில், செல்வராயிருப்பார்க்குப் பணிவுடைமை வேண்டும் என்றும், அது மேலும் ஒரு செல்வம் வந்து சேர்ந்ததைப் போன்றதென்றும் எழுதியிருந்தேன். நிறைந்த செல்வம் பெற்றிருக்கும் காலத்துப் பணிவுடைமை கொண்டிருந்தால் அது போற்றப்படும்; பாராட்டப்படும். பணிவுடைமை நல்ல பண்பாகும் என்பதற்காக, நாம் வறுமையுற்றிருக்குங் காலத்திலும் பணிந்து விடுதல் கூடாது. அப்பொழுது பணியாமைதான் வேண்டும். செல்வஞ் சுருங்கிய காலத்துப் பணிந்து நடந்தால் உலகம் நம்மை இகழ்ந்து பேசும். வயிற்றுப் பிழைப்புக்காக இவ்வாறு அடங்கி ஒடுங்கி நடக்கின்றான் என்று ஏளனஞ் செய்யுமே தவிர, உயரிய பண்பாளன் என ஒருபோதும் உரைக்காது. வறிய காலத்துப் பணிந்து நடப்பது நம் மானத்திற்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும். அதனால் மானத்தை மதிப்போர், வளமிழந்து வாழுங் காலத்துப் பணியாது நின்று, உயர்வொன்றையே ஓம்பி நிற்பர். ஆதலின் மானத்தைப் பற்றி இக் கடிதத்தில் எழுத முற்படுகிறேன்.