நாவை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் எழுதுகிறேன். மற்றவர்க்குத் தீங்கு பயக்கும் பொய், கடுஞ்சொல் முதலியனவற்றைக் கூறாது நாவைக் காத்துக் கொள்ள வேண்டும். நம் சொல் பிறர்க்குத் தீங்கு பயக்குமானால், வேறு பிற அறங்களாற் பெற்ற நன்மைகளும் தீமைகளாகவே முடியும். பெருந்தலைவர் களாக நம்மால் மதிக்கத் தக்கவர்கள் கூடச் சிற்சில வேளைகளில் நாவைக் காத்துக் கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டுப் பேசி விட்டுப் பின்னர் அவர்கள் படும்பாட்டையும் நாம் பார்த்திருக் கிறோம். அதனால் நாவைக் காத்துக் கொள்ளுவதிற் கண்ணுங் கருத்துமாக இருக்கவேண்டும். தீயினாற் சுட்டபுண் ஆறிவிடும். ஒருவேளை, உடலில் புண்ணாகவே தோன்றினும் உள்ளத்தின்கண் ஆறிவிடும். ஆனால், நாவினாற் சுட்ட புண், வடுவாகவே நின்று, மனத்தின் கண் ஆறவே ஆறாது. ஆகவேதான் நாவடக்கம் இன்றியமை யாது வேண்டப் படுவதாகிறது. அடுத்து மனவடக்கம் என்றால் என்ன என்பதையும் எழுது கிறேன். அளவுக்குமேல் ஆசைகொண்டு மனத்தை அலையவிடா மலும், வெகுளி சிறிதுகூடத் தோன்றாமலும், கல்வி யறிவால் நிறைந்து, அடங்கி வாழ்வதுதான் மனவடக்கம் எனப்படும். இம் மனவடக்கம் உடையவனிடத்து, அறம் தானே வந்து சேரும். ஆதலின் மனம், நா, மெய் இம்மூன்றானும் அடங்கி முற்றி வளர்ந்த பயிர்போலப் பணிந்து வாழப் பழகிக் கொள். பணிந்து நடந்தால் உயர்வு பெறுவது உறுதி. "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து" இங்ஙனம் அறிவுடை நம்பி. |