பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வான். தன்னிலையினின்று வேறு படாது,அடங்கி வாழக் கற்றுக் கொண்டவனுடைய உயர்ச்சி, மலையின் உயர்ச்சியை விடப் பெரிதாகும்.

இத்தகைய பணிவுடைமையை, அஃதாவது அடக்க முடை மையை மூன்று வகையாகப் பாகுபாடுசெய்யலாம். ஒன்று மெய் யடக்கம், இரண்டு நாவடக்கம். மூன்று மனவடக்கம். இம்மூன்று அடக்கங்களும் ஒருவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவன வாகும். வாழ்விற் சிறந்து விளங்க, இவை துணை செய்யும்.

ஆமையைப் பார்த்திருக்கிறாயல்லவா? அது, தனக்கொரு தீங்கு வருவதை அறியின் உடனே தன் ஐந்துறுப்புகளையும் உள்ளடக்கிக் கொள்ளுகிறது. அதனால் எவ்விடரும் புகா வண்ணம் தன்னைக் காத்துக் கொள்ள முடிகிறது. அதுபோல மனிதனும் தன் ஐந்து பொறிகளையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அடக்கிவாழ வேண்டுமென்றால் அடியோடு ஐம்பொறிகளையும் அடக்கிப் புலன் நுகர்ச்சியே இல்லாமல் வாழ வேண்டுமென்று கூறுவதாகக் கொள்ளுதல் தவறு. அஃது உலகியலுக்கு ஒத்துவராத செயலாகும். ஆமை எப்பொழுதுமா தன் ஐந்துறுப்புகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது? வேண்டுங்காலத்து வெளியில் நீட்டிக் கொள்ளவும், துன்பம் நேருங்கால் அடக்கிக் கொள்ளவும் வல்லதாயிருக்கிறது. அதுபோல, மனிதனும் வேண்டுமளவு ஐம் பொறிகளையும் ஐம்புலன்கள் மேற்செலவிடவும், குற்றம் நிகழு மெனத் தெரிந்தால் அப்பொறிகளை அடக்கிக் கொள்ளவும் வல்லமை பெற்றிருக்க வேண்டுமென்பதுதான் கருத்து. இவ்வைந்து பொறி களையும் தீ நெறிகளிற் செலவிடாது. நன்னெறிகளிற் செலுத்தி, அதுவும் அளவோடு செலுத்தி வாழ்வதைத் தான் மெய்யடக்கம் என்று சொல்லுகிறோம்.

இனி நாவடக்கத்தைப் பற்றி எழுதுகின்றேன். உலகத்தில் நம் வாழ்க்கையில் நம்மாற் காக்கப்பட வேண்டிய பொருள்கள் பலவுள. அவ்வாறு காக்கப்பட வேண்டிய பலவற்றைக் காவாது விடினுங் குற்றமில்லை. ஆனால், நாவினை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும். நாவினைக் காவாதுவிடின், நாம் சொல்லுஞ் சொல்லின் கண் தோன்றுங் குற்றத்திற்காட்பட்டு நாமே துன்புற நேரிடும்.