தகைமையாளர். இத்துணைப் பெருஞ் சிறப்புகளுக்குரிய வராயினும் அவரிடத்தே சிறிதேனும் செருக்குணர்வைக் காண முடியாது. பணிவின் திருவுருவமாகவே விளங்குவார். சுருங்கக் கூறின் குண மென்னுங் குன்றேறி நின்றவர் அவர். தம்மினுஞ் சிறியாரிடத்தும் பணிவு காட்டும் பண்பினர். 'என்றும் பணியுமாம் பெருமை' என்னும் மறைமொழிக்கு இலக்கியமாய் விளங்கியவர். இப்பணி வினால் உயர் நிலையே எய்தினார். இத்தகைய பணிவினை நீயுங் கைக்கொண்டொழுக வேண்டும். கல்வியும் புகழும் ஒரு புறம் வளர வளர, நம்மையறியாமலேயே மறுபுறம் செருக்குணர்வும் வளர்ந்துகொண்டே வரும். இஃது இயல்பு. நாம் விழிப்பாக இருந்து அவ்வுணர்வை வளரவிடாமல் தடுத்துக்கொள்ள வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதனைக் கிள்ளி யெறிந்தாற்றான் பணிவென்னும் நல்லுணர்வு தளிர்த்துச் செழித்து வளரும். கல்வியாற் செருக்குணர்வு தோன்றலாம்; குடிப்பிறப்பாற் செருக்குணர்வு தோன்றலாம்; கொடையால் தோன்றலாம்; வீரத்தால் தோன்றலாம்; செல்வப் பெருக்கால் தோன்றலாம்; ஏனைய புகழ் முதலியவற்றாலும் தோன்றலாம். இவற்றுள் எந்த வகையாற் சிறப்புற்றிருப்பினும் அதனோடு சேர்ந்து வளரும் அந்தச் செருக்கை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும்; பணிவுடன் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றோராயினும், குடிப்பிறந்தோராயினும், செல்வ ராயினும், வீரராயினும், பிறராயினும் பணிந்து நடக்கக் கற்றுக் கொள்ளுவது, பொதுவாக எல்லார்க்குமே நன்மை பயக்குஞ் செயலாகும். இவருள்ளும் செல்வச் சிறப்புடைய ஒருவர், பணிவுடைமையைக் கற்றுக் கொள்ளுவாரானால், அவர்க்கு மேலுமொரு செல்வம் வந்த சேர்ந்தது போலாகும். அடக்கமுடையவன் எப்பொழுதும் உயர்நிலை அடைவான்; அடங்காது அலைபவன் தாழ்நிலையில் வீழ்ந்து, மீளமுடியாது, துயருறுவான். இவ்வாறு மேனிலை எய்துபவரையும், தாழ்நிலையில் உறுபவரையும் நாட்டிலே கண்டு வருகிறோம். அதனால் அடக்கத்தை, உயர்ந்த செல்வம்போற் கருதிக் காத்து வர வேண்டும். அடங்கி வாழ்வதுதான் அறிவுடைமை என்று கருதி, முறைப்படி நடந்துவரும் ஒருவன் எல்லாராலும் மதிக்கப்படும் பெரும்பேற்றினை அடை |