4 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
1 எனது கடமை அன்புள்ள அரசு, உன் கடிதம் பெற்றேன். மகிழ்ச்சி. அரையாண்டுத் தேர்விற் பெற்ற மதிப்பெண்களைக் குறித்துள்ளாய். காலாண்டுத் தேர்வை விடக் குறைந்துளவே! காரணம் என்ன? படிப்பில் முயற்சிக் குறைவாக இருந்திருக்கிறாய் என்பதைக் காட்டுகிறது அது. தேர்வில் வெற்றி பெற்றாற் போதும் என்ற எண்ணம் மட்டும் போதாது. வகுப்பில், கல்லூரியில் முதல்வனாக விளங்க வேண்டும். அதற்கேற்ற முறையில் நன்கு படித்து, ஆண்டுத் தேர்வில் முதல் வனாக வெற்றி பெற முயன்று படி. உன் கடிதத்தில் இன்னும் எழுத்துப் பிழைகள் உள்ளன. இன்னும் சிறிது அக்கறை கொண்டால் பிழையின்றியே எழுதி விடலாம். எவ்வளவு படித்துப் பட்டம் பெற்றிருப்பினும் பிழைபட எழுதுவோர் நன்கு மதிக்கப்படார். அதனாற் பிழையின்றி எழுதப் பழகு. பழகி வெற்றி பெறு. பிழைபட எழுதுவது ஒரு மொழிக்குச் செய்யும் பெரிய தீங்காகும். உன் தாய்மொழிக்குத் தீங்கு செய்யாதே. இரண்டு திங்களாக உனக்கு அறிவுரைகள் எழுதாமலேயே கடிதங்கள் எழுதி விட்டேன். அலுவல் மிகுதியால், இன்று ஓய்வு கிடைத்தமையால் மீண்டும் சில அறிவுரைகள் எழுதுகின்றேன். நான் எழுதுவது வெறும் “உபதேசமாக”ப் போய்விடக் கூடாது. உன் வாழ்வில் அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகல் வேண்டும். ஏனெனில் நீ எப்பொழுதும் மாணவன் அல்லன். வருங்காலத்தில் இந்நாட்டுக் குடிமக்களில் ஒருவன். நீ ஒழுக்க முடையவனாக இருந்தால் உன் நாடும் நல்ல நாடாகும். ‘எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்ற ஒளவைப் பாட்டியின் பாட்டின் கருத்தை உனக்கு முன்னரே விளக்கிக் கூறியிருக்கிறேன் அல்லவா? |