நீ நினைக்கலாம் ‘நான் மட்டும்’ நல்லவன் ஆனால் போதுமா? மாணவர் அனைவரும் அல்லவா ஒழுக்க முடையவராதல் வேண்டும் என்று; ஆம் அனைவரும் நல்லவராதல் வேண்டும் என்பதே என் அவா. அனைவரும் நல்லவராதல் வேண்டும் என்பதற்கு ஆசிரியர் களை மட்டும் நம்பிக் கொண்டு, பெற்றோர் வாளாவிருத்தல் கூடாது. அத்தனை மாணவர்களையும் ஒருவரே திருத்தல் இயலாது. அதனால் ஒவ்வொரு பெற்றோரும் தத்தம் பிள்ளைகளைத் திருத்த முற்பட வேண்டும். பெற்றோர் ஒவ்வொருவரும் வீட்டில் ஆசிரிய ராதல் வேண்டும். அப்பொழுதுதான் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆதலின் ஆசிரியருக்கு மட்டும் அத்துணைப் பொறுப்புகளையும் விட்டுவிடாமல் நான் உனக்கு அடிக்கடி இவ்வாறு எழுதுகிறேன். ‘ஈன்று புறந்தரல் என்றலைக் கடனே’ என்ற பழம் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. இப்பாடலில் பலருடைய கடமைகளை உணர்த்துகிறார் அதனைப் பாடிய பொன் முடியார் என்ற பெண்பாற் புலவர். பிள்ளையைப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்து ஆளாக்குவது தாயாகிய என்னுடைய கடமை யாகும். அவனைச் சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமையாகும். அவனுக்கு வேல் வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும். அவனுக்குப் பயிற்சியளித்து நன்னெறிப் படுத்துவது வேந்தனுக்குரிய கடமையாகும். போர்க் களம் புகுந்து களிறுகளையடக்கி வெற்றி வீரனாகத் திரும்புவது அவ்விளைஞனுக்குக் கடமையாகும். அஃதாவது அவன் நாட்டிற்குப் பயன்படுபவனாக இருத்தல் வேண்டும் என்பது அப்புறநானூற்றுப் பாடலின் கருத்தாகும். ஒருவன் நாட்டிற்குப் பயன்படுபவனாக - நல்லவனாக வெற்றி வீரனாக விளங்க வேண்டுமென்றால் வீட்டிலுள்ள பெற்றோருக்கும் நாட்டிலுள்ள மற்றோருக்கும் சில கடமைகள் உள. அக்கடமை களை உணர்ந்து அவரவர் நடந்தால் நல்ல மக்களை உருவாக்கலாம். அஃதாவது பிள்ளைகள் நல்லவர் களாக வளர வேண்டுமானால் அகச் சூழலும் புறச் சூழலும் அத்துறையில் அக்கறை காட்டுதல் வேண்டும் என்பது கருத்து. அதனாற்றான் உன்னை நல்லவனாக உருவாக்க ஆசிரியரிடம் மட்டும் பொறுப்பை ஒப்படைத்து விடாமல் நானும் எனது கடமையைச் செய்கிறேன். |