பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

உடையவர். அதனால் 'ஆனையர்' என்றிருப்பதே பொருந்தும் என்று அவ்வாறு எழுதியுள்ளனர்' என்றார். உடனே நான் வருத்தத்தை விடுத்துச் சிரித்து விட்டேன். அவரும் சிரித்தார். நம்மைத் தமிழர் என்று நாணமின்றிக் கூறிக்கொள்கிறோம். நாம் வாழும் நாட்டைத் தமிழ் நாடென்றும் சொல்கிறோம். அங்கேதான் நம் தாய்மொழி இந்தப் பாடுபடுகிறது.

கழி பேருவகையா? களி பேருவகையா?

முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் எனக்கு மடல் எழுதியிருந் தார். என்னைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித் திருந்தார். அதில் 'களி பேருவகை எய்துகிறேன்' என்று எழுதியிருந்தார். என்னைப் பாராட்டி யிருப்பினும் அவர் பிழைபட எழுதியிருந்தமை வருத்தத்தையே தந்தது. பேருவகை என்றால் பெருமகிழ்ச்சியென்ற பொருள். கழிபேருவகை என்றால் மிகுதியான பெருமகிழ்ச்சி என்று பொருள். அஃதாவது அளவு கடந்த மகிழ்ச்சி யென்பது பொருள். "சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகல்" என்று இலக்கணம் கூறும். நான்கு சீர்கள் கொண்ட அடி அளவடியெனப்படும். அய்ந்து சீர்கள் கொண்ட அடி நெடிலடியெனப்படும். ஆறும் ஆறுக்கும் மேற்பட்ட சீர்கள் கொண்ட அடி கழிநெடிலடி யெனப்படும். இதனை அவருக்கு எழுதியிருந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. மீண்டும், மீண்டும் அப்படியே எழுதுகிறார். நீ கழிபேருவகையென்றே எழுது.

நான் எழுதுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், உன் தமிழ்ப் பேராசிரியரிடம் உசாவித் தெளிவுபெற முயல்வது நன்று. அவர் உரைப்பதை எனக்கும் எழுது. முக்குண வயத்தால் முறை பிறழ்ந்துரைப்பது மாந்தரியல்பு. ஆதலின் நானும் தவறாக உரைத்து விடலாமல்லவா? உன் பேராசிரியர் உரைப்பது சரியாக இருந்தால் நானும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். மடல் நீண்டு விட்டதென்று கருதுகின்றேன். தமிழைப் பற்றிப் பேசினால் காலம், பசி அனைத்தையும் மறந்துவிடுவது என் இயல்பாகி விடுகிறது. அதில் அப்படி ஒரு இன்பம் தோன்றிவிடுவதுதான் காரணம்.

அன்புள்ள
முடியரசன்.