பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

1
அறஞ்செய விரும்பு

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. உனக்கு என் வாழ்த்து. அம்மாவும் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார். உடல் நலத்தையும் நன்கு காத்துக்கொள்ளச் சொன்னார். நீ இவ்வளவு காலம் வீட்டிலேயே தங்கியிருந்தமையால், உனக்குச் சொல்ல வேண்டியவற்றை உன் அன்னையே சொல்லி வந்தார். இடை யிடையே நானுங் கவனித்துக் கொண்டேன். இப்பொழுது வெளியூரில் தங்கிப் படிப்பதால், உன்னை அடிக்கடி கண்காணிக்க இயலாது. அதனால் கடிதங்களின் வாயிலாக அறிவுரைகளை எழுதுவேன். நலம் கேட்பதும் கூறுவதுமாக மட்டும் கடிதம் அமைதல் கூடாது. உன் கடிதமும் அறிவு வளர்ச்சியைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும். நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்தையும், நேரிலிருந்து கூறுவதாகவே கருதி ஒழுக வேண்டும்.

நம் நாடு, உயர்ந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வரும் நாடு. அப்பண்பாடுகள், இன்று நேற்றுத் தோன்றி யவையல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்று தொட்டுத் தொடர்ந்து வருவன; உலக மக்கள் அனைவராலும் பாராட்டிப் போற்றப்பட்டு வருவன; இன்று நாகரிகம் மிக்க நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள், பண்பாடு இன்னதென அறியாக் காலத்தி லேயே, இங்குத் தோன்றி வளர்ந்து வந்த பெருமையை உடையன. அத்தகைய பண்பாடுகள், இன்று நாளுக்கு நாள் அருகி வரும் நிலையைக் காணுகின்றேன். அவை மீண்டும் தழைத்து வளர வேண்டும் என்ற ஆர்வத்தால், பண்பாடுகளை வளர்க்கத்தக்க கடிதங் களையே இனி எழுத விரும்புகின்றேன். முதலில் அறத்தைப் பற்றி எழுதுகின்றேன்