உலகத்தில், மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன வாம். இம்மூன்றனுள் பொருளும் இன்பமும் அறத்தின் அடிப்படை யிலே தோன்றி வளர்வன. இக்கருத்தினைச் "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல" என்று புறநானூறு புகல்கிறது. அறத்தால் வரும் இன்பமும் பொருளுமே சிறந்தவை. பிற வகையால் வரும் இன்பமும் பொருளும் இழிந்தனவே. உயர்ந்த இன்பத்தையும் சிறந்த பொருளையும் அடைய நீ விரும்பினால், முதலில் அறத்தையே விரும்ப வேண்டும். அறம் ஒன்றுதான், மக்களுக்குப் புகழையுங் கொடுக்க வல்லது. ஆதலின், அவ்வறத்தைவிட உயர்ந்த ஆக்கம், உலகத்தில் ஒன்றுண் டென்று உரைக்க இயலாது. மேலும் மேலும் உயர்த்துவதாகிய அறத்தினை மறந்தால், அதை விடக் கேடு வேறொன்றுமே இல்லை. அதனால், உன்னால் இயன்ற அளவு அறத்தினைச் செய்ய விரும்பு; இடைவிடாது செய்ய விரும்பு; செல்லும் வழியெல்லாம் செய்ய விரும்பு. அறஞ் செய்தல், பொருளுடையவர்க்கே இயலுவதாகும் என்று நீ கருத வேண்டாம். நீ அவ்வாறு கருதுவதில் ஓரளவு உண்மையும் உளது. எனினும் தமிழர் கண்ட அறம், எல்லாராலும் எளிதிற் பின்பற்றத் தக்கதாகும். அதனைச் செய்ய விரும்பு என்று தான் உனக்கு எழுதுகின்றேன். நல்லன எண்ணுதல், நல்லன சொல்லுதல், நல்லன செய்தல் இவையே அறம். அஃதாவது மனம், சொல், செயல் மூன்றுந் தூய்மை உணடையனவாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ் அறம். நல்லன சொல்லும் பொழுதும் நல்லன செய்யும் பொழுதும் மனம் எவ்வகைய மாசும் இன்றித் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை சிறக்கும். மனத்துள் மாசுடையவராய் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அஃது, ஆரவாரத்திற்காக - ஆடம்பரத்திற்காகச் சொல்வதாகவும் செய்வதாகவுமே அமையும். மனத்துக்கண் மாசிலனாக இருப்பதொன்றே அறமெனப்படும் என வள்ளுவம் வழி வகுத்திருப்பதை, நன்கு மனத்திற் பதிய வைத்துக் கொள் |