96 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
மாசுகள் எனப்படுபவை யாவை? மனத்தை எவ்வாறு தூய்மை யாக வைத்துக் கொள்ளுவது என்று நீ எண்ணலாம். அவற்றையுந் தெளிவாக எழுதுகிறேன். பிறர் நலங்கண்டு பொறாமைப்படுதல், அளவு கடந்து பேராசைப்படுதல், இவை காரணமாகப் பிறரிடஞ் சினங்கொள்ளுதல், இச்சினங் காரணமாகக் கடுஞ்சொற் பேசுதல் என்பனவே மாசுகள் எனப்படும். இவற்றை வேரொடு கல்லி எறிந்துவிட வேண்டும். எறிந்துவிடின் மனந்தூய்மையாகும். அப்பொழுது அறம் தானே வந்தெய்தும். அறஞ் செய்வதற்கு இளமைப் பருவமென்றும் முதுமைப் பருவமென்றும் வரையறையில்லை. எப்பருவத்திலுஞ் செய்யலாம். இப்பொழுது இளமைப் பருவந்தானே, முதுமைப் பருவத்திற் செய்து கொள்ளலாமே என்ற எண்ணம் கனவிலுந் தோன்றுதல் கூடாது. ஒன்றே செய்தல் வேண்டும்; அவ்வொன்றும் நன்றே செய்தல் வேண்டும். அதுவும் அன்றே செய்தல் வேண்டும். ஏனெனில் மனித வாழ்வு நிலையாத தன்மையுடையது. நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்ற பெருமையை உடையதிவ் வுலகம். ஆதலின், வாழும் நாளிலேயே நன்றே நினைத்து, நினைத்த அன்றே அதனைச் செய்ய விரும்பு. அவ்வறத்தைப் போல உனக்கு உற்றதுணை அழியாத்துணை மற்றொன்றில்லை. யாக்கையும், செல்வமும் நிலையில்லாதன என்பது, உயர்ந் தோர் கண்ட முடிபு. நிலையாத ஒன்றால் நிலைத்ததைச் செய்து விடுவது தான் அறிவுடைமையாகும். செல்வம் ஓரிடத்திலேயே நிலைபெற்று விளங்கும் இயல்புடையதன்று.; உருண்டோடுந் தன்மையை உடையது. ஆதலின், செல்வம் நம்மிடம் உருண்டு வரும்பொழுது, அதனை நல்வழியிற் செலுத்த வேண்டும். இயங்க விடாமல் தேக்கி வைத்து நாமே அனைத்தையும் நுகர்வோம் என எண்ணுதல் முறையன்று. செல்வத்தின் பயனே ஈதல்தான். அப்பயனை எய்தாமல், நாமே துய்ப்போம் என்ற அவா தம் மனத்தே தோன்று மானால், அறம், பொருள், இன்பம் என்ற அனைத்தும் நம்மிட மிருந்து தப்பிச் சென்றுவிடும். எல்லா நலனும் அழிந்து, பின்னர் வருந்த நேரிடும். செல்வம் அழியும்; யாக்கை அழியும்; ஆனால், செய்த அறம் என்றுமே அழியாது. இம்மெய்யறிவு வாய்க்கப் பெற்ற காரணத் |