பழியுடையானைப் போற்ற விரும்பவில்லை. சேரனோ அடிகளுக்கு உடன் பிறந்தவன். தன் உடன் பிறந்தானை - தன்னாட்டானைப் போற்ற அடிகள் மனம் இடந்தரவில்லை. போற்றினால் தற்புகழ்ச்சி யாகக் கருதப்படும். ஆதலின், அவனையும் விட்டுவிட்டார் எனக் கருதலாம் எனத் தோன்றுகிறது. இதே மங்கல வாழ்த்துப் பாடலின் மற்றொரு செய்தியையும் எண்ணிப் பார்ப்பது நல்லது. "வானூர் மதியம் சகடணைய வானத்துச் சாலி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை'' என்னும் வரிகள் வருகின்றன. கோவலனுக்கும் கண்ணகிக்கும் மதியமானது, சகடென்னும் உரோகிணியைக் கூடும் நல்ல நாளிலே திருமணம் நடந்தது. மாமுது பார்ப்பான் திருமணத்தை நடத்தி வைக்கின்றான்; மறைவழி காட்டுகிறான்; தீவலம் செய்கின்றனர். இவ்வளவு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றும் அம் மணமக்கள் வாழ்க்கை எவ்வாறிருந்தது? மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக அமைந்ததா? வாழ்க்கை முழுதும் கண்ணீர் தானே சிந்தினாள் கண்ணகி! பொருள் முட்டுப்பாடும் ஏற்பட்டுச் சிலம்பை விற்கும் நிலை ஏற்பட்டதே! கோவலன் கள்வனென்ற பழிக்கு ஆளாகிக் கொலைத் தண்டனை பெற்றானே! கண்ணகி ஆதரவற்றவளாகி, வேற்று நாடடைந்து மாள்கிறாளே! அவர் களுக்கு ஒரு குழந்தை யாவது பிறந்ததா? ஏன் பிறக்கவில்லை? நல்ல நாள், மாமுது பார்ப்பான், மறைவழி, தீவலம் இவை யெல்லாம் என்னவாயின? அவற்றால் அவர்கள் வாழ்க்கையில் வளமும் மகிழ்வும் மலர்ந் திருக்கக் கூடாதா? என்று சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும். மங்கல வாழ்த்துப் பாடல் மட்டுமன்று; சிலம்பு முழுதும் ஊன்றிப் பயில்வார்க்கு அதன் அருமை பெருமைகளும் இளங்கோ வடிகளின் காப்பியத் திறனும் நன்கு புலனாகும். இதனாலன்றோ கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள், "தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை தேரும் சிலப்பதிகாரம்" என்று பாடினார். |