பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
     செயிருடன் வந்தஇச் சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்"

என்று வினவுகிறான். அவளும் கூர்த்த மதியினள் ஆதலின் அம் மகளிரில் ஏற்ற இறக்கங் கூறாது, திறமையாக விடை பகர்கின்றாள்.

"பாண்டியன் மனைவி தன் கணவன் துன்பம் காணாது கழிந்தனள். அக்கற்புக்கரசி துறக்கத்தில் பெருநிலை பெறுக. நம்நாட்டை நோக்கி வந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசுவோம்'' என்று விடை தருகிறாள். தன் மனைவியின் மனக்குறிப்புணர்ந்த செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலையெடுத்துக் கோவிலமைக்க முடிவு செய்தனன்.

செங்குட்டுவன் தன் மனைவியிடம் பெருங்கோப்பெண்டு, கண்ணகி இவ்விருவருள் எவர் சிறந்தவர் என வினவியதாலும், அவள் தந்த மறு மொழியின் குறிப்பையுணர்ந்து அக் குறிப்பை நிறைவேற்றக் கோவிலெடுக்க முயன்றமையாலும் பெண்மைக்குத் தரப்பட்ட முதன்மையை நாம் உணர்கிறோம்.

இம்மங்கல வாழ்த்துப் பாடலில் மற்றொரு செய்தியும் அறிய முடிகிறது. இப்பாடலில் புகாரும், சோழன் வெண்கொற்றக் குடையும், அவன் திகிரியும் அவன் கருணையும் போற்றப்படு கின்றன. இளங்கோவடிகள் நடுவு நிலைமை பிறழாத துறவியாதலின் சோழனைப் போற்றியது போல மதுரைக் காண்டத் தொடக்கத்திற் பாண்டி யனையும், வஞ்சிக் காண்டத் தொடக்கத்திற் சேரனையும் போற்றிப் புகழ்ந்திருத்தல் வேண்டும். இக் காப்பியத்துள் மூவேந்தரும் இடம் பெறுகின்றனர். அதனாற்றான் சாத்தனார், இளங்கோவடிகளை நோக்கி, இக் கதை

"முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
     அடிகள் நீரே அருளுக''

எனக் கூறுகிறார். இளங்கோவடிகள் துறவியாதலின் நடுவுநிலைமை பிறழாது மூவேந்தரையும் ஏற்றத் தாழ்வின்றிக் கூறுவார் எனக் கருதுகின்றார் சாத்தனார். எனினும் பாண்டியனையும் சேரனையும் சோழனைப் போற்றியது போலப் போற்றவில்லை. ஏன்?

காப்பியத்துள் சோழன் எப்பழிக்கும் ஆளாகவில்லை. ஆதலின், அவனைப் போற்றுகிறார். பாண்டியனோ குற்றமற்ற கோவலனைக் கள்வனெனக் கொலை செய்து பழிக்கு ஆளாகி விடுகிறான். ஆதலின்,