மேலும், இந் நூல் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றுள்ளது. பெண்கள் காலில் அணியும் அணிக்குச் சிலம்பு என்று பெயர். ஆண்கள் காலில் அணியும் அணிக்குக் கழல் என்று பெயர். நூலின் பெயர்க் காரணத்தை நோக்கும் பொழுதும் பெண்மைக்கே முதன்மை தரப்பட்டுள்ளது என்பது பெறப்படுகிறது. ஞாயிறு ஆண்பாலாகவும் திங்கள் பெண்பாலாகவும் கூறப் படுவது கவி மரபு. ஆகவே, பெண்மைக்கு முதலிடம் தரும் காப்பியத் தில் மங்கல வாழ்த்துப் பாடலில் பெண்பாலுக்குரிய திங்களை முதலிற் கூறுகிறார். கோவலன் இரண்டாம் நிலையில் வருவது போல ஞாயிறும் இரண்டாம் இடம் பெறுகிறது. மனையறம் படுத்த காதையில் இளங்கோவடிகள், "முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிரொருங் கிருந்த காட்சி போல" கண்ணகியும் கோவலனும் கட்டிலில் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார். இரு கதிரும் ஒரு சேர இருந்தாற் போல இவ் விருவரும் இருந்தனர் என்பது கருத்து. இங்கே அவ்விருவரும் இரு கதிர் எனக் கூறப்படுதலால் கண்ணகியைத் திங்களாகவும் கோவலனை ஞாயிறாகவும் நாம் கொள்ளலாம். ஆகவே, பெண்மை தலைமை பெறுங்காப்பியத்தின் தொடக்கத்தில், ஞாயிறு, திங்கள் என்ற முறை வைப்பை மாற்றித் திங்களை முதற்கண் கூறுகிறார். இக் காப்பியம் பெண்மைக்குத்தான் முதலிடம் தருகிறது என்பதற்கு மற்றொரு சான்றும் உளது. செங்குட்டுவனும் அவன் மாபெருந் தேவியாகிய இளங்கோ வேண்மாளும் அரியணையில் ஒருங்கிருக்குங்கால் சாத்தனார், கோவலன் கொலையுண்டதும் கண்ணகி பாண்டியனிடம் வழக்காடி வென்றதும் உண்மையறிந்த பாண்டியன் உயிர்துறந்ததும் உடனே பாண்டியன் மனைவி பெருங் கோப்பெண்டு கண்ணகியின் துயர் பொறாது உடனுயிர் நீத்ததும் கண்ணகி வஞ்சி நோக்கி வந்ததும் கூறுகிறார். இதனைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகி, பெருங் கோப்பெண்டு இவ்விருவருள் வியந்து பாராட்டற் குரியவர் யார் என அறிய விழைகின்றான். அருகில் இருந்த அமைச்சரிடம், எவர் சிறந்தோர் என வினவியிருக்கலாம். அன்றிப் பிறரிடம் வினவியிருக் கலாம். ஆனால், செங்குட்டுவன் அவர்களிடம் வினவினான் அல்லன். தன் மனைவி இளங்கோ வேண்மாளை நோக்கி, |