| 12 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
பழங்காலத்தும் இன்றும் விழாக்கள் நடைபெற்று வந்தன - வருகின்றன. எனினும் முன்னைய விழாக்கள் அனைத்தும் இன்று நடைபெறுகின்றன என்றல் அமையாது. பல வழக் கொழிந்தன. இன்று நிகழ்வுறும் விழாக்கள் அனைத்தும் முன்பு நிகழ்ந்தனவோ எனின் அதுவும் பொருந்தாது. கால மாறு பாட்டாலும் புதியவர் கூட்டுறவாலும் பற்பல விழாக்கள் புதியன வாகப் புகுந்தன. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' காலவகையால் இயல்பேயாதலின் இன்னோரன்ன மாற்றங்கள் - நிகழ்வனவாயின. சிலம்பும் மேகலையும் சிறப்புறக் கூறும் இந்திர விழா எந்நிலையெய்திற்று? சங்க நூல்கள் கூறும் விழாக்கள் யாவை? இவை எத்தகையன? அவை எவ்வாறழிந்தன என்னும் வினாக் களை எழுப்பி விடைகளை நாட முற்படின் நாம் வருந்தும் நிலையைத் தவிர வேறொன்றுங் காண்டல் இயலாது. இன்று நம்மாற் கொண்டாடப் பெறும் விழாக்கள் அனைத்துக்கும் ஏதேனும் இலக்கியங்களிற் சான்றுகள் உளவோ? என்று நோக்கின் ஒன்றிரண்டு தவிரப் பலவற்றுக்குச் சான்றுகள் கிடையா. நாம் கொண்டாடும் விழாக்கள் பண்டிகையென்றும், திருநாள் என்றும், நோன்பு என்றும் பல்வகைப் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவை இன்றைய நிலையில் நமக்குத் தேவையா? இன்றியமையாதனவா? நாம் இவற்றைக் கொண்டாட வேண்டுமா? என்னும் வினாக்கள் ஒருபுறம் இருக்க அவ்விழாக்கள் தமிழர்க்கே உரியனவா? தமிழ் நாகரிகம் உடையனவா? வேறு நாகரிகங்களை அடிப்படையாகக் கொண்டனவா? பிறர்க்கே உரியனவாகி அவர்தங் கூட்டுறவால் நம்மிடைப் புகுந்தனவா? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அவ்வெண்ணம் நம்மிற் பெரும் பான்மையினர்க்கு எழுவது இல்லை. ஏதோ எல்லாரும் கொண்டாடு கின்றனர் நாமும் கொண்டாடுகின்றோம் என்ற பெரும் போக்கிலே தான் இயங்குகின்றோமே தவிர, எவை நமக்கே உரியன; எவை பிறர்க்கே உரியன? எவையெவை கலந்துள்ளன? என்று நாம் பிரித்துணர்வதேயில்லை. அவ்வாறு வேறு பிரித்துணர்வதால் தீதொன்றும் நேர்ந்துவிடப் போவதில்லை. அரிசி தமிழர் உணவு என்று சொல்கிறோம். கோதுமை வடவர் உணவு என்கிறோம். இதனால் தீங்கா நேர்ந்துவிட்டது. |