பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்13

விரும்பியோர் மாறி மாறி உண்கின்றோம். எனினும் இஃது இன்ன நாட்டுணவு என்னும் உணர்வு நம்மிடையே இல்லாமலா போய் விடுகிறது? அவ்வாறே நாம் கையாளும் ஒவ்வொரு துறையிலும் நம் பண்புகளை - நாகரிக இயல்புகளை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அதனோடமையாது அவ்வத் துறைகளில் கலந்துள்ள வேறு நாகரிகங்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

நம் மொழியில் வேற்று மொழிச் சொற்கள் கலந்திருப்பது போல நம் விழாக்களிலும் அயல் நாகரிகங்கள் அறிந்தோ அறியாம லோ கலந்திருப்பது உண்மை. வெள்ளணி நாள் (பிறந்த நாள்) இன்றுங் கொண்டாடி வருகிறோம். முந்தைய முறை வேறு. இன்றைய முறை வேறு. இன்று எரியும் மெழுகு வர்த்தியை வாயால் ஊதி அணைப்பதும் 'கேக்' வெட்டுதலும் பழக்கமாகி விட்டது. விளக்கேற்றுதல் நம் மரபு. விளக்கை அணைப்பது வேறு மரபு. அதாவது ஆங்கில மரபு. இவ்வாறு பிற நாகரிகக் கலப்பை அறிந்துகொள்வது நலம் பயக்கும்.

நாம் கொண்டாடிவரும் விழாக்களில் குறிப்பிடத் தக்கனவும் பரவலாகவுள்ளனவும் யாவை? ஐப்பசித் திங்களில் வரும் தீபாவளியும், தை முதல் நாளில் வரும் பொங்கலும், ஏசு பிறந்த நாளும், முப்பது நோன்பென்னும் ஈத்துப் பண்டிகையும் ஆகும். இவற்றுள் எது தமிழ் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டது? எது தமிழர்க்கே உரியது? எது பிறர்க்கே உரியது? என்றெல்லாம் ஓரளவு நுணுகிப் பார்க்கும் பண்பைத் தமிழர் நலத்தில் அக்கறை கொண்ட பெரு மக்கள் பரப்பி வருகின்றனர்.

இவை தவிரப் புரட்டாசித் திங்களில் ஒரு விழா நாடெங்கிலும் கொண்டாடிவருகின்றோம். அவ் விழாவுக்கு 'நவராத்திரி' யென்றும் 'தசரா' என்றும் பெயர் கூறுவர். இது தமிழர்க்கே உரிய திருநாளா? பிறர்தங் கூட்டுறவாற் புகுந்த திருநாளா? எனச் சிறிது ஆய்ந்து உண்மை காண்பதே கட்டுரையின் நோக்கமாகும்.

இது பிறர்க்கே உரிய திருநாள்; இங்குக் குடியேறியோர் புகுத்திய திருநாள்; நாம் அவர்களைப் பின்பற்றிக் கொண்டாடுந் திருநாள் என்றே நம்மிற் பெரும்பாலோர் நம்பி வருகின்றனர். அந் நம்பிக்கைக்குக் காரணம் அவ் விழா நிகழ்ச்சி பற்றித் திரித்து விடப்பட்ட கட்டுக் கதைகளும் புராணக் கோட்பாடு களுமே