பக்கம் எண் :

எக்கோவின் காதல்161

"கேளப்பா! "பைத்தியக்காரன்" சினிமாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்."

"திரைப்படத்தைப் பற்றியா சொல்லுகிறாய்?"

"ஆமாமா! கொட்டகை வாசலில் ஒரே கூட்டம்! விதவித மான "தோகை மயில்கள்" உள்ளே சென்று கொண்டிருந்தன. அந்த மயில் கூட்டத்தில் என் கோகிலத்தையும் கண்டேன். ஆம் கோகிலந் தான்! அவள் சிவப்பிற்கும் அந்தக் கருப்பு ஆடைக்கும் என்ன அழகு தெரியுமா? அரைகுறையாகப் பின்னித் தொங்க விடப்பட்டிருந்த அந்தச் சடை - அலட்சியப் பார்வை - எவரையும் கிறுகிறுக்க வைக்கும் புன்சிரிப்பு இவை என்னை அப்படியே சிலைபோல் நிற்கச் செய்துவிட்டன. அங்கிருந்த மயில்களின் பார்வை எல்லாம் இந்தக் குயிலின் பக்கந்தான். வேடர்களின் கண்களைப் பற்றிக் கூறவா வேண்டும்!

'டிக்கெட்' கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவள் எந்த வகுப்பு 'டிக்கெட்' வாங்குகிறாள் என்பதை அவள் கை நீட்டிய அறையின் மேற்புறத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து அறிந்து கொண்டேன்.

நானும் அதே 'டிக்கெட்'டை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி யோடு உள் நுழைந்தேன். அவள் இருக்கைக்குப் பக்கத்திலேயே இடமும் கிடைத்தது. ஆண்டவனுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு அமர்ந்தேன். கடைமுழுக்கன்று கண்ட வருத்தக் குறியைக் காண வில்லை. மலர்ச்சிதான் இருந்தது. உதட்டின் சிவப்பும், கண் மையின் கருப்பும் இயற்கை அழகை அதிகப் படுத்திக் காட்டின. அவை நாகரிக நாரீமணிகள் அணியும் வண்ணப்பூச்சுகளின் ஒத்துழைப்பு.

அவளைப் பார்ப்பேன். அவள் பார்த்தால் திரையைப் பார்ப்பேன். இப்படியாக இருந்ததே ஒழிய, பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருந்தாலும் கண்கள் பேசிக் கொண்டு தான் இருந்தன. அவளோடு எப்படிப் பேசுவது - பேசினால் விடை தருவாளோ என்னவோ என்ற ஐயம் ஊசலாடிக் கொண்டிருந்தது. பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு "மணி என்ன ஆகிறது" என்று தயவாகக் கேட்டேன்.

"9.25 ஆகிறது" என்று சிறு சிரிப்போடு கலந்து விடை தந்தாள்.