அதே சமயத்தில் மாதர் கழகச் செயலாளர் மதுரமும் அங்கு வந்திருந்தாள். அவள் அர்ச்சுனனைப் பார்த்து 'உங்கள் பேச்சு மிக நன்றாக இருந்தது' என்று பாராட்டியதோடு நில்லாமல் கை குலுக்கியதையும் பார்த்து விட்டான் கிருஷ்ணன். அதன் பிறகு கேட்க வேண்டுமா? கிருஷ்ணனுக்கு நெற்றிக் கண் இல்லாத குறைதான். இருந்திருந்தால் அர்ச்சுனனை அங்கேயே சுட்டெரித்திருப்பான். சக்கராயுதங் கூட இல்லாமற் போய் விட்டது. என் செய்வான் சட்டென்று எழுந்து சென்று விட்டான். அர்ச்சுனன் பேச்சில் மயங்கி, அவன் கை குலுக்கில், இன்ப மடைந்த மதுரத்தின் அழைப்பு அடிக்கடி அர்ச்சுனனுக்குக் கிடைத்தது - கழகத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் அவனும் தட்டுவ தில்லை. இச்செயலெல்லாம் கிருஷ்ணனுக்கு ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. அவள் அவனுடைய அத்தை மகள். கொஞ்சம் பணம் படைத்தவள். படித்தவளுங்கூட. முறைமை யால் மணக்க எண்ணங் கொண்டிருந்தான் கிருஷ்ணன். ஆனால் அவள் விரும்பினால் தானே! அவள் காதல் முழுதும் அர்ச்சுனனிடந்தான். அர்ச்சுனனை விடக் கிருஷ்ணன் எவ்வளவோ அழகில் சிறந்தவன். என்றாலும் அவள் அவனை விரும்பவில்லை. ஆம்! உண்மைக் காதலுக்குச் சாதி வேற்றுமை - ஏழை பணக்காரன் என்ற தன்மை, இவை யெல்லாம் கிடையாதென்றால் அழகு மட்டும் என்ன தள்ளுபடியா? அழகையும் அந்தப் பட்டியலிலே சேர்த்து விட்டாள் மதுரம். 'கிருஷ்ணன் - மதுரமாக ' வாழ எண்ணினான் கிருஷ்ணன். ஆனால் அவன் எண்ணத்திற்கு ஓர் அர்ச்சுனன் குறுக்கிட்டான். இந்த எண்ணத்திற்கு மட்டும் யாரேனும் குறுக்கிட்டால் கோழையா யிருந்தாலும் அவனுக்குக் கொஞ்சம் வீரந்தோன்றும். கிருஷ்ணன் இயல்பிலேயே முரடன். பேச்சுத்தான் அகிம்சை. செயல் வேறுதான். அவன் 'சந்தர்ப்பத்தை' எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ***** "நீங்கள் நாளை நடைபெறப் போகும் பொதுக் கூட்டத்தில் கொடியேற்றி வைக்க வரவேண்டும்" என்று அர்ச்சுனன் மதுரத்திடம் கேட்டான். |