பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

எரிச்சலாக இருந்தது. இவன் எதிர்பார்க்கும் வண்டியைக் காண வில்லையல்லவா; அதனால்தான், 'சனியன், நாம் எதிர்பார்க்கும் போது தான் வராது. நாம் சும்மா இருக்கும் போது திருச்சிராப்பள்ளி வண்டி நிமிடத்திற்கொன்றாக ஓடும்' என்று அங்கலாய்த்துக் கொண்டான். வண்டி மணிப்படிதான் ஓடுகிறது. இவனுடைய அவசரம் அப்படி எண்ணும் படி செய்கிறது. தேவகிக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று எண்ணுவான். மனம் 'குபீர்' என்னும். 'சேச்சே' அப்படி யெல்லாம் நேராது. ஏன் நாமாக அலட்டிக் கொள்ளவேண்டும்?' என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.

இவ்வாறு எண்ணிக் கொண்டேயிருந்தவன் சலிப்போடு எழுந்து அங்குமிங்குமாக நடந்து பார்த்தான். அப்பொழுதும் 'கார்' வரவில்லை. 'என்னடா இது பெரிய தொந்தரவாய்ப் போச்சு; சனியன் பிடித்த 'மானேஜர்' முன்னாடியே விடுமுறை தந்திருந்தால் இரயிலிலாவது போய்த் தொலையலாம்' என்று எண்ணிக் கொண்டே 'சிகரெட்' ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.

"மாய வாழ்வு சதமாகுமா - மானிடனே நீ
மனதை அலைய விடலாகுமா"

என்று ஒரு பிச்சைக்காரி பாடின பாட்டு அவன் செவியில் வந்து மோதியது. அவனுக்கு அந்த ஓசை பெரிய துன்பத்தைக் கொடுத்தது. அவன் அருமை மனைவி தேவகியைப் பற்றி எண்ணிக் கொண் டிருக்கும் போது 'அபசகுனம்' போல இப்படிப் பாடுகிறாளே என்று அவளை வெறுத்தான். ஆனால் அவளுடைய தோற்றம் அவளுக்காக இரக்கம் காட்டச் செய்தது. கிழிந்த கந்தலாடை உடுத்தியிருந்தாள். குலைந்து கிடந்த கூந்தல் அவளுடைய முகத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதை ஒதுக்கிவிட்டுக் கொண்டே பாட்டுப் பாடி ஒவ்வொரு காரிலும் கைகளை நீட்டிப் பிச்சை கேட்டு வந்தாள். இடுப்பில் சுமார் மூன்று வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது. அவள் பாடிய பாட்டு, பிச்சை கேட்பதற்காகத்தான் என்றாலும், அந்த ஒலி அவளுடைய இதயத்தைப் பலமாகக் கௌவிக் கொண்டிருந்த சோகத்தின் எதிரொலியாக இருந்தது. அந்தக் காட்சியும் அந்தப் பாட்டும் அரங்கசாமியை, தன் சொந்த வாழ்வைப் பற்றிய நினைவி லிருந்து வேறெங்கோ இழுத்துச் சென்றன.