பிறவெல்லாம் தம்தம் தனிநெறியிற் செல்லாது அடங்கி, ஒடுங்கி ஒன்று மட்டுமே தலை நிமிர்ந்து செயற்படுவது 'ஒருமை' என்றாகிறது. இஃது ஒற்றுமையாகாது. ஒற்றுமை என்றால் என்ன இனி ஒற்றுமை என்ற சொல்லை - அதன் விளக்கத்தைக் காண்போம். ஒரு பள்ளியில் ஆசிரியர் பலர் இருக்கின்றனர். குறித்த நேரத்தில் உள்ளே நுழைகின்றனர். ஒருவர் கணக்குப் பாடம் கற்பிக்கின்றார். ஒருவர் தமிழ் கற்பிக்கின்றார். ஒருவர் ஆங்கிலம்; ஒருவர் அறிவியல் என்று தனித்தனியே பாடங்கள் கற்பிக்கின்றனர். பின்னர் உரிய நேரத்தில் வெளிப்போந்து தனித் தனியே அவரவர் தம் இல்லத்து வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பள்ளியின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு நேரத்தில் ஓரிடத்திற் கூடி ஒன்றுபட்டு நின்று பணி செய்து பின்னர்ப் பிரிந்து தத்தமது கடமையாற்றுகின்ற நிலைமை ஒற்றுமையாகும். அஃதாவது கூட வேண்டிய நேரத்திற் கூடி அவரவர் பாடங்களைக் கற்பித்துப் பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்து வாழ்வது ஒற்றுமை. இதனை 'ஒருமை' என்று கூறுதல் பொருந்தாது. ஒருமை எனக் கூறினால் அவரவர் பாடங்களைக் கற்பிக்காது ஒரே பாடத்தைக் கற்பித்தல் வேண்டும். கூடுதலும் பிரிதலும் இன்றிப் பள்ளிக்குள்ளேயே உறைதல் வேண்டும். இதுதான் ஒருமை. இலக்கண விளக்கம் மற்றொரு வகையால் இச்சொற்களுக்கு விளக்கம் காண் போம். இலக்கணத்தில் 'இரட்டைக் கிளவி', 'அடுக்குத் தொடர்' என இரு சொற்கள் உண்டு. நீர் சலசல என ஓடுகிறது என்னும் தொடரில் சலசல என்பது இரட்டைக் கிளவி ஆகும். கிளவி என்றால் சொல் என்று பொருள். சொல் இரட்டையாகவரின் அஃது இரட்டைக் கிளவி எனப்படும். 'சலசல' எனச் சேர்ந் திருக்கும் பொழுது அஃது ஒலிக்குறிப்புப் பொருளை உணர்த்தும். `சல' எனப் பிரித்தால் தனக்குரிய பொருள் தாராது. தனித்து நின்று பொருள் தாராது. ஒரு சொற்போலச் சேர்ந்து நின்றால் மட்டுமே பொருள் தருவது 'இரட்டைக் கிளவி' எனப்படும். இதுபோன்றதுதான் ஒருமைப்பாடும். அஃதாவது தனித்து நில்லாது, தனக்குரிய தன்மை யிழந்து மற்றொன்றுடன் இரண்டறக் கலந்து ஒன்று போல நின்று செயற்படுவது ஒருமை. |