பக்கம் எண் :

210கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"கொஞ்சமென்ன! எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள். தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். இவன் தண்ணீரைப் பருகிய பின் குவளையைக் கொடுத்தான். அவள் கை நீட்டி வாங்கினாள். ஆனால் இவன் பிடியை விடுவதாயில்லை. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்வையில் கலவரம் நிறைந்திருந்தது. பொன்னம்மாள் அவனுடைய கருத்தைப் புரிந்து கொண்டாள். அவள் நாணித் தலைகுனிந்து "இதெல்லாம் நல்லா இருக்குங்களா?" என்று கேட்டாள்.

"எனக்கு நல்லாத்தானிருக்கு" என்றான் அரங்கசாமி. இருந் தாலும் குரல் தடுமாறியிருந்தது.

"இதெல்லாம் மாமாவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்று போடுவாரே!" என்றாள் பொன்னம்மாள்.

"மாமாவுக்குத் தெரிந்தால் தானே!" என்று இவன் சொன்னான்.

"தெரியாமலா போகும்? என்றைக்காவது தெரிந்தால்?" என்று அவள் சொன்னாள்.

இப்படி அவள் சொன்னதும் அரங்கசாமிக்குத் துணிவு பிறந்து விட்டது. 'என்றைக்காவது தெரிந்தால்' என்று சொல்வதி லிருந்து இவளுக்கும் உடன்பாடு என்பதை அறிந்து கொண்டான்.

"பொன்னம்மா" என்று சொல்லிக் கொண்டே நெருங்கினான். பொன்னம்மாள் பேசாதிருந்தாள். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி தானே. பிறகு கேட்கவா வேண்டும்! இளம் உள்ளங்கள் இணைந்து விட்டன. ஒருவர்க்கொருவர் உள்ளங்களைப் பரிமாறிக் கொண் டார்கள்.

ஒற்றையடிப் பாதையில் வண்டி வரும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டுப் பிரிந்துவிட்டார்கள். பின்னர், தவறாமல் ஒவ்வொரு ஞாயிறு தோறும் இவர்களுடைய இன்ப விளையாட்டு நடந்து கொண்டேயிருந்தது.

அரங்கசாமி காதலில் வெற்றி பெற்றதைப் போலவே தேர்விலும் வெற்றி பெற்று விட்டான். மதுரைக்கு மேல்படிப்புப் படிக்க அனுப்புவதற்கு அவன் தந்தை ஏற்பாடு செய்தார். விடைபெற்றுக் கொள்ளத் தன் காதலியைத் தேடிச் சென்றான் அரங்கசாமி. பொன்னம்மாள் வழக்கம்போல வரவேற்றாள்.