"மாமா சந்தைக்குத்தானே போயிருக்கிறார்?" என்று அரங்க சாமி கேட்டான். "ஆமாம்" என்றாள் அவள். "பொன்னம்மா! நான் மேல் படிப்புக்காக மதுரைக்குப் போகிறேன். அதுவும் நாளைக்கே" என்று சொன்னான். "நன்றாகப் போய் வாருங்கள்" என்றாள். "என்ன! நான் போவதில் உனக்கு மகிழ்ச்சிதானா?" என்று வியப்புடன் கேட்டான். "வருத்தம் என்றால் நின்றாவிடுவீர்? உங்கள் அப்பா விட வேண்டுமே? அதுவுமல்லாமல் படிக்கப் போவதை வேண்டா மென்று சொல்லலாமா?" என்று சொன்னாள் பொன்னம்மாள். "ஓ! அப்படியா! சரி சரி; நான் அஞ்சிக் கொண்டே வந்தேன். நான் சொன்னவுடன் ஒரே அடியாக அழுவாய்; உன் அழுகையை நிறுத்திச் சமாதானப்படுத்தப் பெரும் பாடாய்ப் போய்விடும்; எப்படியெல்லாம் சமாதானம் சொல்வது என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்தேன். நீ ஒரே வரியில் 'போய் வாருங்கள்' என்று சொல்லிவிட்டாய்! சரி அதெல்லாம் கிடக்கட்டும் எங்கே அந்தப் பாட்டை ஒருமுறை பாடு! கடைசியாகக் கேட்டுவிட்டுப் போகிறேன்" என்றான். "பாடினால் என்ன தருவீரோ?" என்றாள் அவள். "பாடுவதற்கு முன்பு கேட்டால் எப்படித் தருவது? பாடி விட்டுக் கேள்! வழக்கப்படி தருகிறேன். பாடு முன்பே அச்சாரம் வேண்டுமோ?" என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினான். "வேண்டாம்; வேண்டாம்! இதோ பாடுகிறேன்" என்று சொல்லிவிட்டு அவளும் பாடினாள். பாட்டு முடிந்ததும் "பொன்னம்மா! சினிமாவில் கேட்ட பாட்டுக்களை அப்படியே பாடுகிறாயே! நீ இந்தக் கிராமத்தில் பிறக்காமல் பட்டணத்தில் பிறந்திருந்தால் சினிமாக்காரர்கள் உன்னை 'ஸ்டார்' ஆக்கியிருப் பார்கள்" "அதெல்லாம் இருக்கட்டும்? நீங்கள் ஊருக்குப் போகிறீர் களே! எனக்கு என்ன கொடுத்துவிட்டுப் போகிறீர்கள்?" என்று கேட்டாள். |