38 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
கவிஞன் இலக்கணத்துக்குக் கட்டுப்பட்டவன் அல்லன் என்று கதைப்பர் சிலர். இலக்கணத்துக்கு அவன் அடிமையாகாமல் அதனைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே இயற்கைக் கவிஞன். உண்மைக் கவிஞன். மற்றையோன் செயற்கைக் கவிஞன்-போலிக் கவிஞன். அவ்வியற்கைக் கவிஞன், உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பாடும்பொழுது பாடல்களில் இலக்கணம் கட்டியங் கூறி நிற்கும். கவிதையிற் சொல்லழகு இந்நூற்றாண்டில் தோன்றியுள்ள கவிதைகள், பெரும் பாலும் அனைவரும் எளிதிற் பொருளுணரத் தக்க சொற்களால் அமைந்தன வேயாகும். இதற்குப் பாரதிதான் முன்னோடியாக விளங்குகின்றார். சங்க இலக்கிய நடையிலிருந்து சிறிது சிறிதாக இறங்கி எளிமையின் இறுதிக் கட்டத்துக்கே வந்துவிட்டது இன்றுள்ள கவிதை நடை. மக்கள் அடிமையில் மூழ்கித் தாய்மொழியை மறந்து, செய லற்றுக் கிடந்த காலம் பாரதியார் காலம். ஆதலின், அவர்களுக்கு ஆவேச வெறியூட்ட, உள்ளத்தில் விடுதலைக் கனலை மூட்டக் கவிதைகளைக் கருவியாக்கிக் கொண்டார் அவர். அதனால் கற்றாரும் மற்றாரும் புரிந்துகொள்ளக்கூடிய, அவர்கள் வாய் தானே பாடக் கூடிய எளிய நடையமைத்து இசையமையப் பாடினார். பாரதிதாசனும் பிறரும் அவரை அடியொற்றிப் பாடு வதையே குறிக்கோளாகக் கொண்டொழுகினர். பாரதியார் எளிய நடையையே வேண்டுபவராயினும் கவிதைக்குத் தனிநடை கொண்டவராகவே விளங்கினார். அவர்தம் உரைநடையிற் காணப் பெறும் எளிமையின் மிகுதியையும் பிறமொழிக் கலப்பையும் செய்யுள் நடையிற் காணவியலாது. பாரதியார் நடைக்கும் பாரதி தாசன் நடைக்கும் வேறுபாடுண்டு. எளிமையே வேண்டு மென் போர் இதனை நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும். கவிதை நடை எளிமையின் எல்லைக்கே வந்து விட்டது. இதற்கு மேல் இனிச் செல்லவியலாது. இறங்கிய நடை, இனி நாளுக்கு நாள் படிப்படியாக ஏறியாதல் வேண்டும். பாரதி மூட்டி விட்ட மொழியார்வத்தீ எங்கும் பற்றிப் பரந்து ஒளிவிட்டிலங்குங் காலம் இக்காலம். ஆதலின், அடிமைக் காலத்து வேண்டப்பட்ட எளிமை, உரிமைக் காலத்தும் வேண்டுமெனப் பேசுவது வளர்ச்சி யைக் குறிக்காது. எளிமை எளிமை எனப் பெருமுழக்கம் ஒருபாற் கேட்பினும் மற்றொரு பால் அருமையும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. |