பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்37

என்று பாரதிதாசன் பாடுகின்றார். பெருமிதத்தின் திருவுருவமாக விளங்கிய பாரதிதாசன் பாடும் இவ் வரிகளால் அவர்தம் அடக்க வுணர்வும் பரம்பரையுணர்வும் புலனாகின்றன.

"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
      பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா - அதைக்
      கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா"

என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடும் முறையால் பாரதிபால் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டை நம்மால் உணர முடிகிறது.

இவ்வாறே பரம்பரையுணர்வு நம் கவிஞர்களிடத்தே சிறந்து விளங்குவதைக் காணல் கூடும். எனினும் பாரதிதாசனுக்குப் பின் தோன்றி வளர்ந்து வரும் கவிஞர் சிலரிடையே அந் நல்லுணர்வு மங்கியிருப்பது வருந்தத்தக்கதே யாகும். "ஒரு மாபெருங் கவிஞன் தனக்கு ஒளி காட்டிய கவிஞனுக்கு அஞ்சலி செலுத்து வதை உலக இலக்கியங்கள் அனைத்திலும் காண்கிறோம்" என்று கற்றவர் கூறுவர்.

கவிதையும் இலக்கணமும்

பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் பாடல்களில் இலக்கணம் மதித்துப் போற்றப்பட்டாலும் வளர்ந்து வரும் கவிஞர்கள், வளர்ந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எழுதிய பாடல்களில் இலக்கணம் எள்ளி நகையாடப் படுகிறது. இலக்கணம் வேண்டுவதில்லை என்றே வாதிடவும் படுகிறது. கல்லார் பலராகிக் கவிதையுலகில் உலா வருவதால் நேர்ந்த விளைவே இது. கல்லாக் கவிஞர், இலக்கணம் வேண்டா வெனும் பொல்லாக் கொள்கை யுடையராகவே இருத்தல் இயல்பு. கல்லார் சொல்லை நல்லோர் ஏலார். என்றுமே வாழ விழையுங் கவிஞர் இலக்கணத்தைப் புறக்கணியார்.

எழுத்து வழு, சொல் வழு, பொருள் வழு, யாப்பு வழு முதலிய அனைத்து வழுக்களும் பொருந்திய பாக்களைப் புனைவ தால் தமிழ்மொழிக்கு யாது பயன்? ஓரிலக்கணமும் அறியாதார் பாட்டுகள் எழுதுவதும் இலக்கணமே வேண்டாவெனக் காட்டுக் கூச்சலிடுவதும் முறையன்று; நெறியும் அன்று.