பக்கம் எண் :

4கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ச் சான்றோர் தட்டித் தட்டி யெழுப்பி யும், அரசியல் தலைவர்கள் போர்ப்பறை சாற்றியும் மொழிப்பற்றை உண்டாக்க வேண்டிய ஓர் அவலநிலை இருந்து வருகிறது. அவ்வுணர்வு இயல்பாக அமைந்த நாடுகளுக்கு மன்றங்கள் வேண்டற் பாலனவல்ல. செயற்கையாக ஊட்ட வேண்டிய தமிழ்நாட்டில் மன்றங்கள் இன்றியமையாது வேண்டப்படுவன வேயாம்.

தமிழ்நாட்டின் நிலை

தமிழகத்தில் தமிழ்மொழிக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு களும் இடையூறுகளும் எண்ணிலடங்கா. அறியாமை, தன்னலம், நயவஞ்சகம், வருவோர்க்கெல்லாம் தலை வணங்கல், எளிதில் நம்புதல் முதலியன மண்டிக் கிடக்குந் தமிழ்நாட்டில், தமிழன்னை எத்தனை யெத்தனை இடையூறுகளுக்கு ஆட்பட்டுக் கண்ணீர் சிந்துகிறாள் என்பதை மாசகற்றிய மனமுடையோர் நன்கு அறிவர். தமிழ்ப் பற்று என்று சொன்னாற் போதும்; “குறுகிய மனப்பான்மை” என்று பழி சுமத்தப்படுகிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றவுடனே ‘மொழிவெறி’ என்று இகழப்படுகிறது. பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழில் எழுதுதல் கூடாது எனினோ ‘மொழி வெறுப்பு’ எனத் தூற்றப்படுகிறது. எப்படியோ இரு வேறுள்ளங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டேயாதல் வேண்டும். அதனாற்றான் தங்குதடை யின்றித் தமிழ் வளர இயலவில்லை என்பதுதான் உண்மை. துறைதோறுந் துறைதோறும் தமிழ் புறக் கணிக்கப்படுகிறது என்பதை எவரால் மறுக்க முடியும்?

‘குறுகிய நோக்கம், மொழிவெறி, மொழிவெறுப்பு’ என்றெல்லாம் வான்பிளக்கக் கூவும் கூக்குரல் கேட்கிறதே அதில் உண்மையுளதா என நோக்குதல் வேண்டும். அக் கூக்குரல் தமிழ் வளர்ச்சி கண்டு, பொறுக்கா தெழுந்த குரல்; வெறுப்பாற் பிறந்த குரல்; வேறொன் றில்லை. அஃது உண்மை சிறிதுங் கலவாத பொய்ம்மைக் குரல் என்பதை உணர்தல் வேண்டும். தமிழ் மக்களிடம் வெறியுணர்வு மட்டும் இருந்திருப்பின் பிறமொழி இங்கே வாலாட்டுமா? தமிழன் றோ கோலோச்சும். அறிவுடையோர், நடுவுநிலைமை பிறழாதோர், உண்மையுணர்ந் தோர், உள் நோக்கம் இல்லாதோர், வெறி யென்றும் வெறுப் பென்றுங் கூறார். அவ்வாறு கூறின் காந்தியடிகள், தாகூர், இலெனின் போன்ற மேன்மக்களையும் அக் குற்றத்துக் குரியோராகக் கருத வேண்டிவரும்.