பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்5

‘தாய் மொழியையும் அதில் உள்ள இலக்கியங் களையும் மதிக்காமல், வேறு மொழிகளுக்குத் தங்களை அடிமை யாக்கிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அளவு வேறு நாட்டில் இல்லை’ என்று கூறியவர் யாரெனக் கருது கிறீர்கள்? ‘நோபல் பரிசு’ பெற்று, உலகப் புகழுக்குரியவராகத் திகழ்ந்த இரவீந்திர நாத் தாகூர்தான். இவர் பிறமொழி வெறுப் பாளரா?

‘நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக் கிறோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை நம்முடைய மொழியில் நாம் பயன்படுத்தி வருகிறோம். அயன்மொழிச் சொற்களை அவ்வாறு ஆளும்போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில் Nedochoty, Nedostatki, Probely என்னும் சொற்கள் இருக்கையில் அயன்மொழிச் சொல்லை நாம் நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாளுதல் வேண்டும்? அண்மையில் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட ஒருவர், அயன்மொழிச் சொற்களை ஆளத் தொடங்குவா ராயின் அவரை மன்னித்துவிடலாம். ஆனால், அவ்வாறே செய்கிற ஓர் எழுத்தாளரை மன்னிக்கவே முடியாது. தேவை யின்றி அயன் மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்க வேண்டிய நேரம் இதுவன்றோ?” (பெங்களூர் குணா) இவ்வாறு கூறியவர் யார்? உலகமே ஒன்றாக வேண்டும் என்று கைதூக்கிய, விரிந்த, பரந்த, அகன்ற மனப் பான்மை படைத்த, புத்துலகச் சிற்பி வி.ஐ.இலெனின் தான். இவரைக் குறுகிய மனப்பான்மையுடையவர் என்று எந்த அறிவாளி யாவது கூற முற்படுவாரா? நம்மைக் குறைகூறும் விரிந்த மனப் பான்மை படைத்த நிறைமதியாளர் இதற்கு என்ன மறுமொழி கூறுவர்?

உலகமே இவ்வாறுதான் இயங்குகிறது; தாய்மொழியை மதித்துப் போற்றி வளர்த்து வீறுநடை போடுகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்றான் இயற்கைக்கு மாறான நிலை! அரசியல் காழ்ப் புணர்ச்சிதான் அவர்களை அவ்வாறு பேசச் செய்கிறது. தமக்கும் தாய்மொழி தமிழ்தான் என்றவுணர்வு அவர்தங் குருதியில் வற்றி விட்டது. என் செய்வது? அவர்தம் உடலில் ஓடுங் குருதி, தூய்மை யடைந்து, தாய்மொழியுணர்வுடன் பரவும் நாள் எந்நாளோ?